பக்கம்:அஞ்சலி.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180 லா. ச. ராமாமிருதம்

அப்பா திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. முற்றிய மூங்கில்போல் வளையாது பனி வெள்ளை போர்த்த அவர் நெட்டை உருவம் தோட்டத்தின் எல்லையைக் கடந்து கொண்டிருந்தது.

நான் ஏன் இப்படி ஆகிவிட்டேன்?

அம்மா இறந்து இன்றுதான் மூன்றாம் நாள்.

***

நான் புத்தகத்தில் கவனத்தை ஊன்ற முயன்றேன். ஆனால் அறையில் காயத்ரியும் இருக்கையில் அது சாத்திய மான காரியமல்ல. நான் அவளைத்தான் ஒரப்பார்வையில் கவனித்துக் கொண்டிருந்தேன். ஜன்னல் கட்டைமேல் உட்கார்ந்துகொண்டு அங்கு தலையை ஆட்டிக்கொண்டிருந்த பூங்கொடியைச் சீண்டிக் கொண்டிருந்தாள்.

என்னைத் தன்னிடம் வரும்படி ஒற்றை விரலால் விளித்தாள். நான் போகவில்லை. நான் என்னைப் பரீட்சை பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவுநேரம் என்னைத் தடுத்துக்கொள்ள முடியும்? ஒரு கணம்கூட என்னால் அவளைப் பிரிந்திருக்க முடியவில்லை. காலையில் கண் விழித்ததும் எழும் முதல் எண்ணமாய்த் துவங்கி இரவு கண் மூடுகையில் என்னோடு என் கனவுகளுக்கு அழைத்துச் செல்லும் கடைசி எண்ணமாய் என்னுள் என்னை வியாபித்தாள். நாளாக ஆக இந்த ஆட்சியின் மும்முரம் அதிகரித்ததே யொழிய தணிந்தபாடில்லை. எனக்கு உணவுகூடச் சில சமயங்களில் உட்செல்லவில்லை. இந்த நிலைமை புரியவில்லை. எப்பவும் இன்பமாயுமில்லை. கத்தி கூர்மையில் தடவிய நெய்யை நக்குவதுபோல் பயங்கரமாய் இருந்தது.

அவள் என்னோடுதாணிருந்தாள். ஆனால் எவ்வளவு இருந்தாலும் எனக்குப் போதவில்லை. இது எந்த நியாயத்திலும் சேரவில்லை. ஆனால் இதிலிருந்து மீளவும் முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/190&oldid=1026245" இருந்து மீள்விக்கப்பட்டது