பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேலும் கலக்கிவிட்டது. அத்துணைக் கேடும் உன்படைவிளைவு என அறிந்தேன்; வேந்தே! அந்நாடாளும் அரசர் அறிவு குறையுடையவர்; உன் பெருமையறியாது உன்னைப்பகைத்துக் கொண்டார்கள்; அதனால் அவர் கேடுற வேண்டுவது பொருத்தமே; ஆனால், அவர் அறிவிலர் என்று எண்ணாது, அவர் பகையைப் பெரிதெனக்கொண்டு, நீ போர் தொடுத்ததன் பலனாய், அவர்நாடும், நாட்டவரும் அல்லவோ கேடுற்றுப் போயினர்; காட்டை அழித்து நாடுகாண்பதே நல்லவர் கடன்; ஆனால் நல்லோன் என, நாட்டவர் போற்றும் நீ, நாட்டைக் காடாக்கிக் கெடுத்தொழிந்தனையே! இது நின் பெருமைக்குப் பொருந்துமோ?” என்று, நாம் கூறப்புகுந்த அறிவுரையினை, அவன் பகைநாட்டுப் பாழ்பட்ட நிலையைக்காட்டி, அவனைப் புகழ்ந்துரைக்கும் வகையால், அவன் உளங்கொளப்பண்ணிய, புதுமை போற்றற்குரியது;

"நின் நயந்து வருவேம் கண்டனம்; புல்மிக்கு
வழுங்குநர் அற்றென, மருங்குகெடத் தூர்த்து
பெருங்கவின் அழிந்த ஆற்ற; ஏறுபுணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண்ணுயர் வைப்பின் காடாயின; நின்
மைந்துமலி பெரும்புகழ் அறியார், மலைந்த
போர் எதிர் வேந்தர்; தார் அழிந்து ஒராலின்
மருது இமிழ்ந்து ஓங்கிய நளிஇரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு,
முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை,
நந்து நாரையொடு செவ்வரி உகளும்
கழனிவாயில் பழனப் படப்பை
அழல் மருள் பூவின் தாமரை, வளைமகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்

அறாஅ யாணர், அவர் அகன் தலை நாடே".
—பதிற்றுப்பத்து: 23: 11-25

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/14&oldid=1318823" இலிருந்து மீள்விக்கப்பட்டது