பக்கம்:அணியும் மணியும்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


131 கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணியும் வகையில் சங்கிலிபோல் இயங்குகின்றன. 'இப்பொழுது நாட்டுக்கு எது தேவை? அஞ்சாமை தேவை; அஞ்சாமையால் உண்மை அரும்பும்; உண்மையால் உணர்வு பிறக்கும்; உணர்வால் சுய ஆட்சி கிடைக்கும்; சுய ஆட்சியால் உலக இன்பம் நுகரலாம்; உலக இன்பத்தால் பேரின்பம் பெறலாம். ஆதலால் வரம்பிலா இன்பத்துக்கு அடிப்படை அஞ்சாமை என்பதை ஈண்டு ஒரு முறைக்குப் பன்முறை வற்புறுத்துகிறோம்." - இதில் அந்தாதித் தொடை முறையைக் காண முடிகிறது. மீண்டும் மீண்டும் கூறல் உணர்வை மிகுதிப்படுத்துகிறது. அடுக்குத் தொடர்கள் அமைப்பது ஒரு புறம் இருக்க அதனையே வேறு தொடர்களில் கூறித் திரும்பக் கூறல் என்னும் உத்தியை அமைக்கக் காண்கிறோம். “எங்கணும் போர்! எங்கணும் பூசல்! எங்கனும் பிணக்கு! தமிழ்த்தாய் எரிகிறாள்; கரிகிறாள்; சாதிப் பூசலை நிறுத்துங்கள்! சமயச் சண்டையை நிறுத்துங்கள்". இதில் மீண்டும் கூறல் அமைகின்ற சொல்லாட்சிகள் காண்க. அவருக்கே உரிய சொல்லாட்சிகள் அடுக்கிக் கூறுதல், வியப்பிடைச் சொற்கள் பயன்படுத்தல் என்பதை அறிகிறோம். அதுமட்டும் அன்று. அவருக்கே உரிய சொல்லமைப்புகளும் உள்ளன. வினைமுற்றுகள் பெரும்பாலும் செய்யும் என்னும் வாய்பாட்டில் முடிகின்றன. 'கூறுப உண்ப" எனச் செய்பு என்னும் வினைமுடிபுகளைச் சில இடங்களில் கையாள்கிறார்.