பக்கம்:அணியும் மணியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

காமல் ஏனையவற்றைத் தக்க உருவங்கள் கொண்டு விளக்கியிருப்பது அவர் சொற்றிறனின் சிறப்பியல்பாகும்.

சுருங்கச் சொல்லுதல் என்ற அணிமட்டுமன்றி. விளங்க வைத்தல் என்ற சிறப்பும் இவர் குறளுக்குள்ள தனிச் சிறப்பாகும். சொல்லைப் பயனபடுத்தும் பொழுது அக்கருத்தை விளக்க அதன் இனமான சொல்லை உடன் பயன்படுத்தும் சிறப்பு அவர் பாக்களில் மிளிர்கின்றது. கல்வி என்றால் அதனோடு இனமான கல்லாமை என்பதையும் உடன் வைப்பது அவர்தம் மரபாக விளங்குகிறது. நட்பு என்றால் உடனே அதற்கு இனமாகத் தீநட்பையும் விளக்கிக் காட்டுதல் அவர் சிறப்பாகும். பெரியாரைத் துணைக் கோடல் என்றால் அதனோடு இணையாகச் சிற்றினஞ் சேராமை என்பதையும் உடன் கூறி விளக்குகிறார்.

அதைப் போலவே தனிக் குறளிலும், ஒரு கருத்தைக் கூறினால் அதற்கு இனமான கருத்தையும் சொல்லையும் உடன் வைத்துச் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் இயல்பைக் காண்கிறோம்.

இனிய வுளவாக வின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – 100

என்ற குறளில் இனிய என்பதற்கேற்ப இன்னாத என்ற சொல்லையும், கனி என்பதற்கு இனமாகக் காய் என்ற சொல்லையும் அமைத்துத் தொடர்புடன் முரணும்படக் கூறிக் கருத்தை விளங்கவைக்கக் காண்கிறோம்.

அறத்திற்கே யன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை – 76

என்ற குறளிலும், அறமும் மறமும் ஒருங்கு அமைக்கக் காண்கிறோம்.