பக்கம்:அணியும் மணியும்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 பலநாள் பிரிந்து இருந்த தலைவிக்குத் தலைவனின் வருகையில் ஒரு புதுமை காண்பது இயல்பு. அதனால் விருந்து விருப்புறும் தலைவி என்பதற்குத் தலைவனின் புதிய வருகையை எதிர்பார்க்கும் தலைவி என்று கொள்ளினும் அமையும் 'தலைவியின் ஆவல் நிறைந்த நெஞ்சு மகிழ, நீ விரைவில் தேரைச் செலுத்து' என்று தலைவன் கூறுவதாகவும் கொள்ளலாம். தலைவியின் ஆவல் நெஞ்சையும் மகனோடு மகிழ்ந்து பேசும் அன்புக் காட்சியைக் காண அவாவும் தலைவனின் நெஞ்சையும் இப் பாடல் வெளிப்படுத்துகிறது என்றும் கூறலாம். அன்புடைய நெஞ்சம் என்பது தலைவன் தலைவியரிடை மட்டும் நிலவுவதொன்றன்று என்பதையும், ஏனையவரிடத்தும் அவ்வன்பு நெஞ்சம், உடனிருப்பதால் மகிழ்ச்சியையும் பிரிவ தால் துயரத்தையும் தரவல்லது என்பதையும் சங்கப் பாடல்களே அறிவுறுத்தும். மகளைப் பெற்று வளர்த்த தாய், தன் மகள் தன் ஆருயிர்த் தலைவனோடு அருஞ்சுர வழியில் உடன்போக, அதனால் அவளை நாடித் தேடி அலமந்து மணஞ்சோர்ந்து கூறும் கூற்றில், பெற்ற மனத்தின் அன்புள்ளம் வெளிப்படுகிறது. தலைவி ஒருத்தி தான் விரும்பும் தலைவனோடு வேற்றுர் சென்றுவிடுகிறாள். வீட்டில் அவளை வளர்த்த தாய் அவள் சென்ற இடமெல்லாம் தேடி, வருவாரையெல்லாம் அவர்கள் சென்றவிடம் தெரியுமா என்று வினவுகின்றாள். அவர்கள், பெண்கள் தம் தலைவரோடு உடன்போவது இல்லறத்தின் நல்லறம்தான் என்றும், யாழிலே பிறக்கும் இசை யாழுக்குரிய தாகாமல் கேட்பவர்க்கே உரியது போலவும், கடலிலே பிறக்கும் முத்து அணிபவர்க்கே உரியது போலவும், மலையிலே பிறக்கும் சந்தனம் துய்ப்பவர்க்குப் பயன்படுவது போலவும் பிறந்த அகத்தைவிட்டுத் தலைவன் அகம் செல்வதுதான் பெண்களின் இயல்பு என்றும், இன்ன பிறகூறி அவலத்தை ஆற்றியிருக்குமாறு