பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கல வாழ்த்து

311


மாக சடம், ஆற்றல் என்பவை பற்றிய அடிப்படைக் கண்டு பிடிப்புக்களுக்குக் கொண்டு செலுத்தும் என்பதற்கு ஐயமில்லை. இவை இன்னும் பத்து அல்லது இருபது யாண்டுகளில் எதிர்பாராத பலன்களை விளைவித்தல் கூடும். இப்படித் தானே 1920-லும் 1930-லும் மேற்கொள்ளப் பெற்ற ஐரோப்பிய ஆராய்ச்சிகள் அணு உலைகளைப் பிறப்பிப்பதற்குக் காரணமாக இருந்தன.

அணுவாற்றல் பற்றிய அக்கறையும் உத்தேசமாக அது பொருளாதார உலகில் செய்யக்கூடிய நன்மைகளும், அறிவியல் ஆராய்ச்சிக்கும் பல்கலைக்கழகப் படிப்புக்கும் அப்பாற் பட்ட தேவைகளையும் உண்டாக்குகின்றன என்பதையும் நாம் அறிதல் வேண்டும். அவற்றுள் ஒன்று கீழ் நிலைப் பள்ளிகளில் அறிவியல் படிப்புக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்துறைப் பயிற்சிக்கும் தூண்டுதலை விளைவித்தல் ஆகும். தொழில் வளம் மிக்க நாடுகளிலும் கூட திறமை மிக்க அறிவியல் ஆசிரியர்கட்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. திடீரெனத் தோன்றிய அணுயுகத்தின் விளைவாக, பிழைப்புக்கான தொழிற் பயிற்சிக்கும் உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் பயிற்றுதலுக்கும், ஆசிரியர்கட்குப் பயிற்சி தருவதற்கும் அவசியமான தேவை உண்டாகும். பள்ளிகளில் அறிவியல் பயிற்றுதலில் முன்னேற்றம் காணச் செய்தல் வேண்டும் என்பது ஐக்கிய நாட்டுக் கல்வி - அறிவியல் - பண்பாட்டுக் கழகத்தின் திட்டத்தில் ஒரு பகுதியாகும். இக்கழகம் முதலாவதாக மிகவும் பிற்போக்காகவுள்ள நாடுகளில் இப்பணியை முதலில் தொடங்கும். அவை தான் அணுவாற்றலின் பயனை முதலில் அடைய வேண்டும். அங்குள்ள பள்ளிகளில்தான் நவீன அறிவியல் பற்றிய பாடத்திட்டங்கள் இன்னும் மேற்கொள்ளப் பெறவில்லை. இக்கழகம் இங்கு மேற்கொள்ளும் சேவைகளில் ஒன்று அணுவாற்றல், கதிரியக்கம், கதிரியக்கப் பொருள்கள் ஆகியவை பற்றிய அடிப்படைக் கருத்துக்களைக் கட்புல - செவிப்புலக் கல்வியாலும் பிற துணைக்கருவிகளாலும் அறிவியல் பயிற்றுதலில் நுழைப்பதற்கு வழி வகைகளை வகுத்து வருகின்றது.