பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI


கொண்ட முயற்சிகள், பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றிய தகவல்களை யெல்லாம் திரட்டி, தொகுத்து வகுத்த போது இன்றைய அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் வளர்ச்சிக்கும் அடிப்படை அமைத்த பெருமை முஸ்லிம் விஞ்ஞானிகளையே சாரும் என்பதை என்னால் ஆதாரப்பூர்வமாக உணர்ந்து தெளிய முடிந்தது. ‘யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்’ எனும் உள்ளத்து உணர்வால் உந்தப்பட்டு, அவற்றையெல்லாம் கோடிட்டுக் காட்டும் முயற்சியாக இச்சிறு நூலை எழுதி வெளியாக்கியுள்ளேன். இம் முயற்சியில் முன்னரும் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் முயன்ற போதிலும் அம் முயற்சிகள் சிறிய அளவிலேயே அமைவதாயிற்று. எனினும் முஸ்லிம்களின் அறிவியல் முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை விரிவாக, எந்தெந்த அறிவியல் துறை யார், யாரால் உருவாக்கப்பட்டு, எந்தெந்த கால கட்டங்களில் வளர்த்து வளமாக்கப்பட்டது என்பதையெல்லாம் கால முறைப்படி எழுத எண்ணங் கொண்டு, அம்முயற்சியிலும் முழு அளவில் ஈடுபட்டு எழுதத் தொடங்கியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அந்நூலும் உங்கள் கரங்களில் தவழ இறைவனின் திருவருள் துணை செய்யும் என நம்புகிறேன்.

எனது முப்பத்தைந்தாண்டு கால அறிவியல் தமிழ்ப் பணியால் பெற்ற பட்டறிவு இத்தகைய நூல்களை உருவாக்கும் எனது முயற்சிக்குப் பெரும் துணையாய் அமைந்துள்ளது.

எனது மற்ற நூல்களை ஏற்று ஆதரவு நல்கி வரும் வாசகர்கள் இந்நூலையும் ஏற்று ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


அன்பன்

மணவை முஸ்தபா
நூலாசிரியர்.