பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அண்ணாவின் ஆறு கதைகள்


கிளம்பினால் வீடு திரும்பி வரும்போது 12 மணிக்குமேலே ஆகும். மடியிலே இரண்டோ மூணோ பணமும் இருக்கும்.

“கமலம்! அடி அம்மா கமலம்! தூங்கிவிட்டாயோ” என்று கதவைத் தட்டுவார். இருபத்தைந்து வயதான அவருடைய ஒரே மகள் — விதவை கொட்டாவி விட்டுக் கொண்டே வந்து கதவைத் திறப்பாள்.

பாமாவைப்பற்றி சிங்காரவேலுப்பிள்ளை கேள்விப்பட்டிருக்கிறார்! பார்த்துமிருக்கிறார், சந்தைப்பேட்டை ஜமீந்தார் சிங்காரவேலருக்கு பாமாவின் பேச்சை எடுத்தாலே, காயகல்பம் சாப்பிட்டது போல இருக்கும். எப்படியாவது பாமாவைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்பது அவர் எண்ணம். மனைவி வைசூரியால் மாண்டுபோன நாள் முதற்கொண்டு அவர் இதே எண்ணத்தில் இருந்தார் அவருக்கு வேதவல்லி வைப்பு! இருந்தாலும் வேதவல்லிக்கு வயது நாற்பதாகிவிட்டது!

பாமாவைப்போல சின்னஞ்சிறு குட்டி, தனக்கு மனைவியாக இருந்தால், இந்திரலோகத்திலும் இல்லாத ஆனந்தமாக இருக்கலாம் என்று அவர் எண்ணினார், வழக்கப்படி இதைப் புரோகிதரிடமும் சொன்னார்.

“குட்டி ரொம்ப அழகுதான்! ஆனால் பொல்லாத குட்டி. என் தலையைக் கண்டதும் வந்தாரம்மா புரோகிதர், வாழலைக்கோ, வெண்டக்காய்க்கோ” என்று கேலி செய்யும். அவ, அம்மாவுக்கு நல்ல பக்தி. திதி திவசத்தின்போது மனங்குளிர தான தருமம் செய்வாள். நேம, நிஷ்டை தவறுவதில்லை. அவ அம்மாகிட்ட நானும் ஏற்கனவே சொல்லியுமிருக்கிறேன். உம்ம ஜாதகமும் இப்ப நன்னா இருக்கு! உமக்கு ஒரு புதுப்பெண்ணாவது, புது மாடாவது, புது வேஷ்டியாவது இன்னும் கொஞ்ச நாளிலே தானா வந்து சேரணும்” என்று புரோகிதர் சிங்காரவேலருக்கு தேன்மொழி கூறிவந்தார்.

“சாமி அந்த அம்பிகையை ; நான் இந்த ஐம்பது வருஷமா மறந்ததில்லை, கும்பாபிஷேகம் ஒரு தடவை கூட செய்-