உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

யிலேயே சாதாரணமாகிவிட்டது, ஆனால் இந்தக் கோட்டைக்குள் நுழைந்து உள்ளே வந்து பார்க்கையில், இப்பொழுதிருக்கும் ஆட்சியாளரைவிட பல ஆயிரக்கணக்கான மடங்கு அதிகாரம் படைத்தவர்கள் மக்களுடைய எழுச்சிக்குரலைக்கேட்ட நேரத்தில் கோட்டையை விட்டுவிட்டு ஓட வேண்டியிருந்தது என்பதை என்னால் மறந்துவிட முடியவில்லை.

ஆகையால். இன்றையதினம் பெருவாரியான அளவிலேயிருந்து, ஆட்சி நடத்தும் கட்சிக்காரர்கள் அவர்களுடைய வக்கீல்கள் என்று நான் சொல்வேன். பீஸ் வாங்காவிட்டாலும் என்ன சொல்கிறார்கள் என்றால் "அவர்கள் எதிர்க்கட்சியிலிருப்பவர்கள்—என்ன காரியத்தை செய்துவிட முடியும்?" என்று. ஆனால், ஆளும் கட்சியில் இருப்பவர்கள் என்றென்றைக்கும் ஆளும் கட்சியிலேயே இருப்பார்கள், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் என்றைக்குமே ஆளும் கட்சியா வரமுடியாது என்னும் ஏகாதிபத்திய தத்துவத்தை எழிலான தமிழிலே எடுத்து சொன்னார்கள், " அத்தைக்கு மீசை முளைத்தால் அல்லவா சித்தப்பா என்று அழைப்பதற்கு? அத்தைக்கு மீசை முளைக்கப்போவதும் இல்லை, சித்தப்பா என்று அழைக்கப்போவதும் இல்லை" என்று ஒரு உறுப்பினர் எடுத்துச் சொன்னார். ஆனால். அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா என்று அழைக்கிறார்கள் அண்டைய நாடாகிய கேரளத்தில் என்பதை அம்மையார் அவர்கள் மறந்து விடமுடியாது. அது மட்டுமல்ல, அத்தைக்கும் சித்தப்பாவுக்கும் மீசை ஒன்று தான் வித்தியாசம் என்று உலகம் கருதுவதில்லை. பல அத்தைகளுக்கு மீசை இருக்கின்றன. என்றாலும் நாம் அத்தை என்று கருதிக்கொண்டுதானிருக்கிறோம். ஆகையால், ஆளும் கட்சியிலிருப்பவர்கள் எதிர்க் கட்சியிலிருப்பவர்களை அணைத்துச் செல்ல வேண்டுமென்று எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். இன்றையதினம் எதிர்க் கட்சியாக இருப்பவர்கள் நாளைக்கே ஆளும் கட்சியாக மாறக்கூடும். மாறலாம் இன்றையதினம் ஆளும் கட்சியில் பெருவாரியாக இருப்பவர்கள் எல்லாம்—என்னைப் பொறுத்தவரை இந்தச் சபையினுடைய ஒழுங்கு முறைக்கு அது உட்பட்டதாகத்தான் இருக்குமென்று கருதுகின்றேன். செஞ்சிக் கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜாக்கள் அல்ல, காங்கிரஸ்க்கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் வீரதீரமாக சுதந்திரப் போராட்டத்திலே அவர்களே ஈடுபட்டவர்கள் என்று கருதிக்கொண்டு, அவர்கள் பிறரைப்பற்றி "இவர்களெல்லாம் பிரிட்டிஷ்