ச: இது கடவுளா, அது கடவுளா, ஆறுமுகமா, ஆனை முகமா, பசு கடவுளா, பாம்பு கடவுளா, கண்டதும் அத்தனையும் கடவுள்தானா—என்று பேசறாளே, அது நாஸ்தீகம் தானே.....
ம: அது எப்படி நாஸ்திகமாகும்......கடவுளே கூடாது என்றால்தானே நாஸ்தீகம்....
ஜ: ஆமாம்....அது உண்மைதான்.....
ம: கடவுள், கடவுள் என்று கூறிக்கொண்டு கண்டதை பூஜிப்பது கூடாது என்கிறார்கள். இதை நாஸ்தீகம் என்கிறீர். (சட்டைப் பையிலிருந்து ஒரு ஏடு எடுத்து) இதைக் கேளுங்கள்—எடுத்ததை எல்லாம் கடவுளாக்கி வழிபட்டு கோயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விசித்திர வழக்கம், இந்தியாவில் இருக்கிறது. பெயரளவில் பக்தி பண்ணிவிட்டு நடைமுறையில் நேர்மாறான செயல்களைச் செய்வதும் நம்மவர் வழக்கமாகிவிட்டது.
ச: இது எந்த மேயோ எழுதினது.....
ம: இது மேயோ சொன்னதுமல்ல, திராவிடத்தார் சொன்னதுமல்ல, பாரதத்தின் முடிசூடா மன்னர், பண்டித ஜவஹர், பெங்களூரில் பேசியது, 3—6—1951-ல் 'அனுமான்' இதழில் வெளிவந்தது. பீமராவ்! இதைத்தான் பத்தாயிரம் துண்டு வெளியீடு போட ஏற்பாடாகி இருக்கிறது, காவிய காவி பாதுகாப்பு மகாநாட்டின்போது பொதுமக்களுக்குத் தர.
பீ: மகாநாடு இல்லை—அந்த எண்ணத்தை விட்டு விட்டேன்—ஆனால், இந்தப் பொன்மொழியைப் பொதுமக்கள் படிக்கட்டும், இன்னும் ஒரு பத்தாயிரம் வெளியிடலாம். (சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்து) இந்தா ஐந்து ரூபாய், என் நன்கொடை.
வணக்கம். நான் சென்று வருகிறேன்.
144