தூக்கி வைச்சி வைச்சிப் பேசினேனே! தமிழ்நாடுன்னு பேர் வைக்கக் கூடவா உனக்கு மனம் இல்லை, தமிழன் தானா நீ! மான ரோஷம் எல்லாம் வித்துப் போட்டு, நீ மந்திரியா இருக்கலாம்....நான் எப்படி அதைப் பார்த்துகிட்டுச் சும்மா இருக்க முடியும்......ஆகவே, இரண்டிலே ஒண்ணு பார்த்துவிடறேன்....என்று 'போர்' ஆரம்பிச்சிவிட்டிருப்பாரெல்லோ......
ஊழி: ஆமாம்.....தமிழ்நாடு என்கிற பெயருக்காக 'போர்' நடத்தப் போவதாகக்கூடச் சொன்னதாகக் கவனம்......
காம: சொன்னாரய்யா, சொன்னார். பிறகு, பார்த்தார், நான் தமிழ்நாடு கிடையாதுன்னு செல்லி விட்டேனா, என்னடா செய்யறது, இந்த மாதிரி நிலைமை ஆயிப்போச்சேன்னு, யோசனை செய்தாரு. செய்து, பிடி இராமனை! என்று அவரோட ஆசாமிகளுக்கு வேறே வேலை கொடுத்து விட்டாரு.....
ஊழி: சாமர்த்தியசாலிதாங்க......
காம: யாரு? அவருமட்டுந்தானா? ஏன்யா, அவர் மூலமாகக் காங்கிரசுக்கு வரக்கூடிய ஆபத்தை வரவிடாமப்படிக்குத் தடுத்த என்னோட சாமர்த்தியத்தைக் கொஞ்சங்கூடப் பாராட்டமாட்டே போலிருக்குது.......
ஊழி: செச்சே! அப்படி இல்லிங்க....நீங்க, முன்னே எல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருப்பிங்களே, இப்ப, என்னமோ குழைறதும் கொஞ்சறதுமா இருக்கவே.........
காம: குழையறதாலே, இலாபம் இருக்கா இல்லையான்னு பாரு. பம்பாயிலே இவ்வளவு ரகளை நடந்தது—பஞ்சாபிலே குஜராத்திலே—அசாமிலே—ஒரிசாவிலே—எங்கேபார்த்தாலும் ரகளையோ ரகளைன்னு நடந்தது—துப்பாக்கிப் பிரயோகம் நாள் தவறாமல் நடந்தது......கொலை! படுகொலை! சித்திரவதை! காங்கிரஸ் கொடுங்கோலாட்சி!—என்று இன்னேரம் இதற்காக, பெரியவரு சூறாவளிபோல அல்லவா பிரசாரம் செய்து, காங்கிரசோட மானத்தை வாங்கி விட்டிருப்பாரு—கொலைபாதக ஆட்சித் தலைவர் வருகிறார், அவர் முகத்திலே காரித் துப்புங்கள்—என்று இராஜேந்திர பிரசாத் வந்தபோது இயக்கமே நடத்தி இருப்பாரே! நீயும் பார்க்கறயே, நாள் தவறாமல் பேசுகிறாரே, ஒரு வார்த்தை, கண்டனம் பேசுகிறாரா? பேசமாட்டார்! எனக்குச் சங்கடமாக இருக்குமே என்கிற எண்ணத்திலேதான். இல்லையானால், 'நேரு ஒழிக' கிளர்ச்சிதான் நடக்கும்.
158