பல்லாயிரவர் ஆர்ப்பரிப்பர். ஆலயங்களிலே அந்தணர், அந்தி பூஜை அர்த்த ராத்திரி சேவை என்று காரியங்களிலே ஈடுபடுவர். வீரனின் இரத்தம் அங்கே சிந்தும். இங்கே வேதியக் கூட்டம் விலாப்புடைக்கத் தின்று, தின்றது செரிக்கச் சந்தனம் பூச, பூசிய சந்தனம் கீழே சிந்தும். அமளியிலே அங்கங்கள் அறுபடும்; இங்கு அரசாங்கப் பொக்கிஷம் அந்தணர் ஏற்பட்டால் குறைவுபடும். இந்த முறையில் ஆரியம் அங்கு வேலை செய்கிறது. அரசுகளை அழிக்கிறது அவனிகாவலா!
சேர: ஆற்றோரத்திலே ஆடு மேய்த்து, மலைச்சரிவிலே மாடு மேய்த்து மானையும் பன்றியையும் வெட்டித் தின்று, நெருப்பையும் நீரையும் கும்பிட்டு, சோமரசமும் சுரபானமும் பருகி, பௌண்டரீக யாகமும் பிறவும் செய்துகிடந்த கூட்டம், கோட்டைகளைத் தகர்த்து, கொத்தளங்களைத் தூளாக்கி படைபல வென்று தடைபல கொன்று தன்மானத்தையே தரணிவாழ் மக்கள் போற்றவேண்டும் எனப் பரணி பாடி வாழும் தமிழரை, நம்மை நிந்திப்பதா? பச்சை கண்டு இச்சை கொண்ட நச்சு நினைப்பினர் செங்குருதி பாய்ச்சி செந்தமிழர் வீரத்தை நிலைநாட்டி தங்கக் கோட்டைகளிலே வைரமணிகளென ஒளிவிட்டு விளங்கு வீரராம் தமிழரை, கேலிமொழி பேசுவதா? ஆஹா! அவ்வளவு துணிந்து விட்டதா அந்த ஆற்றலற்ற கூட்டம்! எவனுடைய தயவு கிடைத்துவிட்டதாம் அந்தப் பவதிபிக்ஷாந்தேகிகளுக்கு! யார் அவர்களுக்குத் துணை? தேவனா! மூவனா? தேய்ந்து வாழும் சந்திரனா? தெருப் புழுதியுடன் விளையாடும் வாயுவா? சாக்கடையிலும் சரசமாடும் வருணனா? எந்தக் கற்பனைக் கடவுளை நம்பி இந்தக் காரியம் செய்யத் துணிந்தனர்?
வில்: யார் முன்னின்று, ஆரிய மன்னருக்கு இந்தத் தைரியமளித்திருந்தாலும் சரி, மன்னர் மன்னவா! மண்ணிலே என் உடல் வீழ்வதாயினும் சரியே அந்த மாற்றார்களை மண்டியிடச் செய்வேன். இது உறுதி, சத்தியம். தமிழகத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். போர் தொடுக்க உத்தரவு அளியுங்கள்.
சேர: ஆம்! போர்தான்.
279