உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்: கேள், கொடுக்கப்படும்.....

படு: கேட்கத்தானே போகிறேன்.....மடத்தை உங்கள் கையிலே ஒப்படைக்கிறேன்.....ஆனால், அங்கு விழா அன்று கிடைக்கும் பணம் அவ்வளவும் எனக்கு......என் விருப்பப்படி நடப்பேன்—குறுக்கிட்டால் தொலைத்து விடுவேன்.

கந்: ஒரு நாள் உன் இராஜ்யம்! அவ்வளவுதானே......

படு: அவ்வளவேதான்......என் திட்டப்படி நடந்தால் வெற்றி—தெரிகிறதா.....

முரு: சந்தேகமே வேண்டாம்.....சர்வேஸ்வரன் மீது ஆணை......

படு: (வெறுப்புடன்) சர்வேஸ்வரனை ஏனய்யா அழைக்கிறீர்கள். சண்டாளத் திட்டம் போட்டுவிட்டு.....

கந்த: பழக்கத்திலே வந்துவிட்டது, சம்போ, சர்வேஸ்வரா, என்று சொல்லிச் சொல்லி......

[மடாலயக் கூடத்தில் பக்தன் அருளாளர் எதிரே வீழ்ந்து வணங்கியபடி]

பக்: சம்போ! சர்வேஸ்வரா! குருநாதா!.....

[அமர்ந்ததும்.]

மடா: மெய்யன்பனே! பொன்னார் மேனியனைப் போற்று! போக போகாதிகளில் இலயிக்கும் சுபாவத்தை மாற்று. பார், பிறகு—பாரிலே இன்பம், பரமபதத்திலே எல்லையில்லா ஆனந்தம் தோன்றும்.

கை: மடாலயத்திடம்...விசேஷமான அக்கரை.....ஏதேதோ செய்யவேண்டும் என்று அவருக்கு நெடுநாட்களாக அவா.....

மடா: அம்பலவாணா! அவனருள் பெற்றவர்க்கே அவ்வெண்ணம் உதயமாகும். மலட்டு மாடு, மதுரமான பால் தருமா?

[கந்தபூபதி அங்கு வருகிறான். அவனைக் கண்டதும் கையாள் குறும்பாகச் சிரிக்கிறான். மடாதிபதி கண்களை மூடிக்கொள்கிறார்.]

கை: ஸ்வாமி நிஷ்டையில் இறங்கி விட்டது.....வாரும், போவோம்.....

[வணங்கி விட்டுச் செல்கிறார்கள்.]

301