நாலைந்து கல் தொலைவில், சிறு காடடர்ந்த இடத்தை நோக்கி மோடார் செல்கிறது. 'நாடியா'வுக்கு இலேசாகத் திகில் பிறக்கிறது. காட்டிலே அடித்துப் போட்டுவிட்டு விடுவார்களோ என்ற பயம்.
தொலைவிலிருந்து ஓசை கேட்கிறது; கல்லைப் பிளப்பது போன்ற ஓசை.
சிறிது நேரத்தில், மோடார் ஒரு வெளியில் சென்று நிற்கிறது கீழே இறங்குகிறார்கள் இருவரும். ஒரு புதிய கோயில் எழும்பிக் கொண்டிருக்கிறது. சிங்காரவேலர் உருக்கமாகப் பேசுகிறார்; "இந்தத் திருப்பணியிலேதானம்மா நான் ஈடுபட்டிருக்கிறேன். நெடுங்காலத்துக்கு முன்பு இது ஒரு கீர்த்திமிக்க ஸ்தலம். காலக் கொடுமையால், இடிபாடாகி விட்டது இந்த ஆலயம். இதனைப் புதுப்பித்துக் கட்டி முடிக்க வேண்டும். ஆண்டவன் கருணையும் தயவும் இருந்தால்தான் முடியும். நாடியா! இங்குள்ள மூர்த்தியின் பெயர் அனாதரட்சகர் என்பது. பகவான் எடுத்த அவதாரங்கள் பத்து அல்லவா? அந்த பத்து அவதாரங்களிலும் செய்து முடிக்காத காரியம், ஏழைகள் படும் துயரைப் போக்காமலிருந்து விட்டது.
அதற்காகவே பகவான் இங்கு அனாதரட்சகர் என்ற திரு நாமத்துடன் அவதரித்தார் என்பது ஐதீகம். பழய செப்பேடு, ஓலைச் சுவடி மூலம் இது தெரிகிறது. ஒரு புலவர்குழு தலபுராணம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. வெளியீட்டு விழாவும் விமரிசையாக நடந்திடும்.
நாடியா! இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டுவிட்டால், இங்கு சாஸ்திர முறைப்பட்ட பூஜைகள் நடக்கத் தொடங்கி விட்டால், ஏழைகளுக்கு இன்பமான வாழ்வு கிடைத்திடும்.
352