நாடியாவின் மனக் கண்முன், குப்பம் புது சீரூராகத் தெரியலாயிற்று; குப்பை மேட்டில் புரண்டுகொண்டிருந்த சிறுவர்கள் பள்ளிகளில் படிக்கும் காட்சி தெரிந்தது. பள்ளம், சேறு, எல்லாம் மறைந்து வரிசை வரிசையாக வீடுகள், வீடுகளில் விளக்கொளி, மக்கள் முகத்தில் மகிழ்ச்சி ஒளி தென்பட்டது.
நாடியா, சில ஆண்டுகள் நாடகத்தில் இருந்தவள்; ஏழையர் வாழ்வு சீர்படவேண்டும் என்பது பற்றிய 'வசனம்' பல, பாடம் அவளுக்கு.
"உண்மையாகவா..." என்று தழதழத்த குரலில் கேட்டாள்.
சிங்காரவேலர் ஒரு வசீகரமான புன்னகையை காட்டியபடி தலை அசைத்தார்; நாடியா தலை கவிழ்ந்துக் கொண்டாள்.
"நாடியா! எனக்குத் தெரியும். நீ, படபடவென்று பேசுபவளே தவிர நல்ல மனம், இளகிய மனம் உனக்கு என்று. கருப்பனைப் பற்றிக் கவலைப்படாதே மேல் கோர்ட்டில் அவனுக்காக வாதாட வேறு ஏற்பாடு செய்து விடுதலை வாங்கித் தர முடியும். இப்போது என் குடும்பப் பெயர் காப்பாற்றப்பட வேண்டும்...இத்தனை ஏழைக் குடும்பங்களின் நல்வாழ்வுக்காக, என்ன சொல்கிறாய்?" என்று கேட்டார். "ஆகட்டும் உங்கள் இஷ்டம்போல" என்றாள் நாடியா.
காட்சி 10
இடம்:—வழக்கு மன்றம்.
இருப்போர்:—சிங்காரவேலர், கண்ணாயிரம், நாடியா, கருப்பன், வீராயி, வழக்கறிஞர்கள்.
நிலைமை:—[கருப்பன் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறான் சாட்சிக் கூண்டில் கண்ணாயிரம் நிற்கிறான்.]கண்ணாயிரம் சார்பில் வந்துள்ள வழக்கறிஞர்: (நாடியாவின் அலங்காரப் பையைக் காட்டி) இது யாருடையது என்று தெரியுமா?
கண்: (சிங்காரவேலரைப் பார்த்து விட்டு) தெரியாது...
355