உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காட்சி 12

இடம்:—மாளிகைக் கூடம் (சில நாட்களுக்குப் பிறகு).

இருப்போர்:—சிங்காரவேலர், அன்னபூரணி, கண்ணாயிரம்.

நிலைமை:—குப்பம் வெள்ளத்தால் சேதமானபோது உதவிசெய்து ஏழைகளுக்குக் கஞ்சி ஊற்றியதற்காக பெரிய அதிகாரி, நேரிலேயே வந்து சிங்காரவேலருக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றிருப்பதை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொண்ட நிலையில் இருக்கிறார் சிங்காரவேலர்.

அன்: தம்பி! வந்து போனாரே பெரிய அதிகாரி, அவரிடம் ஏன் கண்ணாயிரத்தைப்பத்தி எதுவுமே சொல்லல்லே......உனக்குத் தெரிந்தவங்களை, கண்ணுக்குச் சினேகிதம் செய்து வைத்தாத்தானே நல்லது.....

சி: பெரிய அதிகாரியிடம் இவனைப்பத்திச் சொல்லணுமா....எதைக் குறித்துச் சொல்றேக்கா! எதை? {கோபமாக) வெளியே தலைகாட்ட முடியல்லே.....கண்ட பய கண்டபடி பேசறான். கூடத் தகாதவனோடெல்லாம் கூடிக்கொண்டு ஆட்டம் போடறான்......

அ: ஏண்டா தம்பி! இல்லாதும் பொல்லாததும் சொல்றே. இப்பத்தான் கண்ணு, நாட்டியம் பாட்டுக்கச்சேரி இதுக்கெல்லாம் போறதுகூட இல்லியே......

சி: (வெறுப்புடன்) அந்த இழவுக்குப் போய்க்கொண்டிருந்தாக்கூடப் பரவாயில்லையே......இப்ப 'ஐயா' உலகத்தைத் திருத்தக் கிளம்பிட்டாரே உனக்குத் தெரியாதா? உழவனுக்கே நிலம்....கொடுக்கச் சொல்றாரே.....இவங்க பாட்டன் சொத்து....பங்கு போட்டுக் கொடுக்கச் சொல்லி இவர் உத்திரவு போட்டு விட்டாரு....தெரியாதா உனக்கு.....குடும்ப கெளரவமே நாசமாகுது.....கேவலமாப் பேசறானுங்க.....

க: (கோபிக்காமல் மெல்லிய குரலில்) கேவலமாகப் பேசாமெ வாழ்த்துவாங்களா, நம்ம செய்யற காரியத்துக்கு......

சி: (கோபமாக) என்னடா சொல்றே.....என்ன சொல்றே?

அ: சும்மா இருடா, தம்பி.

சி: ஏண்டா முணுமுணுக்கறே. நம்மாலேதானே குடும்ப மானமே போகுது என்கிற எண்ணம் இருந்தா இப்படியா நடந்துக்கொள்வே....

360