இன்பத்தைச் சுவைத்துக்கொண்டு, சீமான் மகன் என்ற அந்தஸ்த்தில் புரண்டுகொண்டு, தெவிட்டும் அளவு இரத்தத்தைக் குடித்துவிட்டு, இப்போது எனக்கே உபதேசம் செய்கிறாய்...போதனை செய்யும் துணிவு வருகிறது உனக்கு...
க: (ஆத்திரமும் அழுகுரலும் கொண்ட நிலையில்) அப்பா!
சி: (பற்களைக் கடித்தபடி) அப்பா! ஆமடா! ஆம்! அந்த ஒரு சொல்தான் நீ எனக்குத் தந்தது...அதற்காக நான் உனக்கு இந்த மாளிகையைத் தருகிறேன், மாந்தோப்பு தருகிறேன், கடைகள், வீடுகள், நகைகள், மோட்டார்கள், என் உழைப்பு முழுவதும் தருகிறேன். சிறுவிரல் அசைத்ததில்லை நீ. பெருநிதி கிடைக்கிறது உனக்கு. சின்ன மீன்களைத் தின்றுத் தின்று பெரிய மீன் கொழுக்கிறது. அந்தப் பெரிய மீனைத் தின்பதற்கு நீ பிறந்திருக்கிறாய். நியாயமா பேசுகிறாய், நியாயம்—என்னிடம்—நீ—இப்போது! அப்பா! புதிய மாடல் மோட்டார் வேண்டும். இப்போது இருப்பதற்கு என்ன? அது அறுபது மைல் வேகத்துக்கு மேல் போகவில்லை அப்பா. ஆமைபோல நகருகிறது. வேறே ஸ்போர்ட்ஸ் மாடல் வேண்டும். ஆகட்டும் பார்க்கலாம். ஆர்டர் கொடுத்தாகி விட்டதப்பா! சரி, சரி.....இப்படி அல்லவா உனக்கு வேண்டிய பொருளை எல்லாம் கேட்டுப் பெறுவாய். முட்டாளே! இது எப்படிக் கிடைத்தது என்று அப்போது யோசித்ததுண்டா? இவ்வளவு சுகபோகம் ஏன் என்ற எண்ணம் பிறந்ததா? இவ்வளவு நமக்குத் தருகிறாரே நாம் அவருக்கு என்ன தருகிறோம் என்ற எண்ணம் பிறந்ததா? அதுதான் தருகிறாயே ஒரு சொல்.......அப்பா.....! அது ஒன்றுதானே நீ தருவது.......அவ்வளவுதானே உன்னால் முடிந்தது.
[அவ்வளவுதான் அவரால் பேச முடிந்தது. மயக்கம் அவரைத் தாக்கிற்று. அன்னபூரணி அம்மாள் டாக்டர்! டாக்டர்! என்று அலறினார்கள். வேலையாட்கள் பதறினார்கள். கண்ணாயிரம் கண்களிலே நீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது.]