1.சென்று வருகிறேன்
மலேசியத் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், தமிழ்ப் பண்பாட்டில் அக்கறை கொண்ட அன்பர்களும், இதழாசிரியர்களும் பல ஆண்டுகளாக நான் அங்கு வந்திருந்து, அளவளாவி, அகமகிழ்ச்சி பெற்றிட வேண்டுமென்று விரும்பி அன்பழைப்புத் தந்து வந்தனர்.
இப்போதுதான் மலேசியா செல்வதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிட முடிந்திருக்கிறது - சென்று வருகிறேன்.
"மலேசியாவில் தமிழர்கள் குடியுரிமை பெற்று, மலேசியக் காரர்களாகியுள்ளனர். மேலும் பலர், அந்நிலை பெற்றிட விழைவு கொண்டுள்ளனர். உழைத்துத் தம் வாழவினைச் செம்மைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதனை நேரிலே வந்து கண்டு களிப்பினைப் பெறுவீர்” என்று கனிவுடன் அழைத்துள்ளார்கள்.
"என்பும் உரியர் பிறர்க்கு' எனும் மரபுதித்த இன்தமிழர் - என்நாடு இந்நாடு; பொன்னாடாக ஈந்திடுவேன் என் உழைப்பை, என்று இதயம் கனிந்து கூறி மலேசியராகித் திகழ்கிறாரே, அவர்தம் அன்பு மொழி கேட்க, இன்பமுகம் காணச் செல்கிறேன்.
16.7.65 காலை, என தம்பி இரா. செழியன், எம்.பி. அவர்களுடன் மலேசியா சென்றுவரப் புறப்படுகிறேன்.
மலேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ், கம்போடியா, பர்மா எனும் நாடுகளைக் காணத் திட்டம் மேற்கொண்டுள்ளேன்.
மூன்று கிழமைகளில் எல்லா இடங்களையும் கண்டு திரும்பிவிடும் விருப்பம் கொண்டுள்ளேன்; அவ்வப்போது செய்தி தருகின்றேன். மலேசியா சென்று வருகிறேன். உமது நல்வாழ்த்துத் துணை நிற்கும் நிலையிலே! மலேசியாவில் பலநகரங்களில் வரவேற்பு விழாக்களும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்துள்ளனர்.