பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


சாண் வயிற்றை நிரப்பமுடியாது நிர்க்கதியாய், பல்லாயிரக்கணக்கான தோழர்கள் கடல் கடந்து மலாய் நாட்டுக்கும். சிங்கப்பூருக்கும் தோட்டக் கூலிகளாய்ச் செல்கின்றனரே! ஏன் செல்வமில்லையா இந்த நாட்டில் அவர்களைச் சீர்படுத்த?

🞸🞸🞸

இடிந்த மனத்தைப் புதுப்பிக்கவேண்டிய நேரத்திலே, இடிந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு, பூசாரி புளகாங்கிதமடைகிறான். மக்கள் மனம் குமுறிக் கிடக்க, கடவுளுக்குக் கும்பாபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பசிக்கு உணவில்லை; இருக்க இடமில்லை; வாழ வசதி இல்லை மக்களுக்கு. ஆனால் ஆண்டவனுக்குக் கோயில் திருப்பணி, குடமுழுக்குகள் முதலியவைகளுக்குக் குறைவில்லை.

🞸🞸🞸

படித்த கூட்டம் பதவியிலும், பரமன் அருளிலும் மூழ்கிக்கிடக்கிறது. பாமரரோ பரிதவிக்கின்றனர் பசியால்.

🞸🞸🞸

இந்த அகில உலகைப் படைத்தவனுக்குக் கோயில் கட்டுவதிலும், கும்பாபிஷேகம் செய்வதிலும், தங்க ரிஷபம், வெள்ளித்தேர் போன்ற விதவிதமான வாகனங்கள் செய்வதிலும், அவற்றின் வாலறுந்தால், காதறுந்தால், காலொடிந்தால் அவற்றை ஈடு செய்வதிலுந்தான் இன்று மக்கள் அறிவையும் பணத்தையும் பயன்படுத்துகின்றனர். படிக்கும் மக்கள் ஹாஸ்டல் வசதியற்றிருக்கும்போது, படிக்கப்பள்ளிகளிலே இடமில்லாது ஏங்கித் தவிக்கும் போது, பரந்த இந்தத் திருநாட்டின் நிலைமையைப் பாருங்கள்.

🞸🞸🞸