பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ரல்லாதார் புரட்சி. அது மிக அபூர்வமான வெற்றியைக் திராவிடருக்குத் தந்தது.

தியாகராயரைப்பற்றிய தொகுப்பு நூல் ஒன்று நமக்கு மிகமிகத் தேவை. திருவல்லிக்கேணி திராவிட—முன்னேற்றக் கழகத்தார் இந்த நல்ல பணியிலே ஈடுபட வேண்டும். தியாகராயரின் குடும்பத்தாரிடமும் தியாகராயரின் அன்பர்களிடமும் சென்று அவரைப்பற்றிய முக்கியமான குறிப்புகளைச் சேகரித்து அடுத்த ஆண்டிலே தியாகராயரைப்பற்றி அழகிய தொகுப்பு நூலை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். சர். பி. தியாகராய செட்டியார், டாக்டர். நடேச முதலியார் ஆகிய இருவரின் சரித்திரமே இன்னும் எழுதப்படவில்லை. தமிழ் ஆராய்ச்சியிலும் தமிழ்த்தொண்டிலும் ஈடுபட்டிருக்கும் நம்முடைய அறிஞர் கா. அப்பாதுரை அவர்கள் இந்தப் பணியிலே ஈடுபடவேண்டுமென்று அவரையும் அன்புடன் வேண்டிக் கொள்ளுகிறேன்.

கூட்டம் கூடி நாம் பேசுவதோடு நில்லாமல் இது போன்ற ஆக்கவேலைகளிலும் ஈடுபடவேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தியாகராயர் வாழ்க்கைக் குறிப்புகளோடு டாக்டர். நடேச முதலியார் அவர்களின் வாழ்க்கையையும் சேகரிக்க முற்படுங்கள். நம்மை விட்டுப் பிரிந்த இவ்விரு பெரியார் சரித்திரமும் அவசியம் எழுதப்பட வேண்டும்.

மறைந்த நம் மாவீரர்—வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் நினைவு நாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடிய உங்களை மனமுவந்து பாராட்டுகிறேன்.

தியாகராயர் நம்மைவிட்டுப் பிரிந்தார். ஆனால் அவரது ஞாபகம் நம்மை விட்டுப் பிரியாது. சர். பி. தியாகராயர் அரும்பாடுபட்டு வளர்த்த கொள்கைகளைக் கடைப்பிடித்து அதனின்றும் வளர்ச்சி பெற்று உயர்ந்தோங்கி வந்திருக்கும் திராவிடர் இயக்கம் வெற்றி மேல் வெற்றி பெறும் சான்ற உறுதியோடு நீங்கள் வீடுசெல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டு என் பேச்சை முடிக்கிறேன்.