பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நழுவிப் போன நாடக மேடை

வாடிக்கையாக உடன்வரும் வேடிக்கை நண்பர் சி. வி. ராஜகோபாலுக்குப் பதில் இந்த முறை அண்ணா மாயூரம் வந்தபோது அவருடன் டி. கே. பொன்னு வேலுவைக் கண்டதும், வியப்பாயிருந்தது எனக்கு! அதிகம் பேசாமல், ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு, ஒரு பக்கம் ஒதுங்கக் கூடியவர் அவர். அண்ணா K. P. சண்முக சுந்தரம், பேராசிரியர் கந்தசாமி, டாக்டர் சந்திர சேகரன் சகோதரர்களின் வீட்டில் தங்கினார்கள். அங்கே கண்டிப்பாக மரக்கறி உணவுதான். ஒரே நாளில் பொன்னு வேலுவுக்கு bore அடித்து விட்டதாம். மெதுவாக “என்னிடம் வந்து “என்னங்க கவிஞர்! மாயவரம் வந்தால், கவிஞர் வீட்லெ வரால் மீன் குழம்பு ரொம்ப Famous என்று கேள்விப்பட்டேன். எப்ப உங்க வீட்லெ சாப்பாடு?” என்று கிசுகிசுத்தார்.

இதைக் கவனித்து விட்டார் அண்ணா. “என்ன கருணானந்தம்! பொன்னுவேலுவுக்கு என்ன வேணுமாம்? non விஜிடேரியன் சாப்பாடா? நீ கொடுத்து விடாதே! நான் சொல்றேன்; நாளைக்கு மதியம் உங்க வீட்லெ எங்களுக்குச் சைவ சாப்பாடு போடணும்! வத்தக் குழம்பு, ரசம், பருப்புத் துவையல், கீரை இந்தமாதிரி-உன் wife சில ஸ்பெஷல் அய்ட்டம்ஸ் செய்வாங்க இல்லியா-அதெல்லாம் செய்யச் சொல்லு: அதென்ன பொன்னுவேலு. உனக்கு அப்படி ஒரு பிடிவாதம், அவுங்க வீட்டுச் சைவ சாப்பாடு ரொம்பப் பிரமாதமாயிருக்கும்! மீன் சமையல் செய்யச் சொன்னா, நமக்காக, ஆனா, அவுங்க இஷ்டத்துக்கு மாறாக, ஆள்வச்சி செய்வாங்க, பேசாம இரு!” என்று கடிந்து கொண்டார் அண்ணா.