பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருணானந்தம்

193


பயனில்லாமல் போயிற்றே! ஒரு காலத்தில், பெரியாரின் வாரிசாகச், சட்டப்படித் தத்துப்பிள்ளையாக வருவார் என எதிர்பார்த்தேன். பெரியாரைப் பகைத்துக் கொண்டு, அண்ணா வெளியேறியபோது, அண்ணாவின் வாரிசாகவாவது சம்பத் நிலைத்திருப்பார் என்று நம்பினேன். அவர் தி. மு. கழகத்தில் தொடர்ந்து இருந் திருந்தால் ஆட்சிப் பொறுப்பில் சிறந்த நிர்வாகியாக விளங்கியிருப்பாரே! காமராஜர் வாழ்ந்த வரையில் அவரிடம் விசுவாசம்.அவர் பிணமாகி வீழ்வதற்குள் இந்திராகாந்தியிடம் விசுவாசம் என்று அவரது தேசியப் பற்றும் தடம் புரண்டுதான் போயிற்று!

கோடம்பாக்கம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை அவர் நடத்தியபோது, மாயூரத்திலிருந்து ஓடோடி வந்தேன். வழக்கமான டிக்கட் விற்கும் பணி என்னிடம் தரப்பட வில்லை. அண்ணா முன்னிலையில் சம்பத்திடம் ஏனென்று கேட்டேன். “நீங்க இப்பதானே ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க” என்றார் சம்பத், இது 31.7.1960ல். அன்றைய மாநாட்டில், “தம்பி சம்பத் சொன்னான்” என்றுதான், வழக்கப்படியே பேசினார் அண்ணா! ஆனால்... ஆனால்... ஆனால்!

அடுத்து ஆறு மாதங்களுக்குள் சடசடவென்று முன்னேறி, உண்ணாநோன்பு தொடங்கிவிட்டார் சம்பத், அண்ணா அளவிறந்த உளைச்சலுற்ற மனத்தினராய்இனிச் சம்பத்துத் தேறமாட்டான் என்று இறுதியாகப் புரிந்துகொண்டு “தோழர் சம்பத், தன் உண்ணா நோன்பைக் கைவிடுவார் என்று நம்புகிறேன்” என்று, பாஷையை மாற்றிக்கொண்டாரே!.24.2.1901ல் தன் அறிக்கையில்!

பிரிந்து சென்றபிறகு அண்ணாவும் சம்பத்தும் சந்தித்துக் கொண்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கவில்லை இருவரையும் ஒரேயிடத்தில்!

அ.-13