பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

235


“மாநாட்டு நுழைவுச் சீட்டுடன் சேர்த்து உணவுக்கும் டிக்கட் தந்து விடுவோம். கடுமையான ரேஷன் அமுலில் இருப்பதால் வருகிறவர்களின் வசதிக்காக நாமே ஆள் வைத்துச் சமையல் செய்யலாம்”-என்றார் அய்யா. சரி என்றோம். “இப்போதுதான் துரத்துக்குடி மாநாடு நடந்துள்ளதால் ஈரோட்டுக்கு அதிகக் கூட்டம் வராது-” என்னும் அய்யாவின் கருத்தில் மட்டும் நாங்கள் மாறு பட்டோம். இதில் நாங்கள் சொன்னதைக் கேட்காததால், பின்னால் மிகவும் அவதிப்பட்டார் அய்யா அவர்கள்.

“அண்ணாதுரை இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கப் போகிறார் என்றால், இனிமேல் திராவிடர் கழகத் துக்கும் அவர்தான் தலைவரா?” என்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், தற்செயலாக என்னைப் பார்த்த தி. பொ. வேதாசலம் அப்பாவித்தனமாகக் கேட்டார். “அதில்லிங்க. திராவிடர்கழகத்துக் குத் தலைவர் நீங்கதான் ! அண்ணா, இந்த மாநாட்டுக்கு மட்டுந்தான் தலைவர்-” என்றேன் நான். அவருக்குத் தன் பதவி பறிபோய்விடுமோ என்கிற பயம்.

அண்ணாவை இரட்டை மாட்டுச் சாரட்டு வண்டியில் வைத்து, ஈரோட்டு வீதிகளில் ஊர்வலம் நடத்தினோம். அய்யாவுக்கு உண்டான மகிழ்ச்சியின் எல்லையை நாங்கள் அன்று நேரடியாகக் கண்டோம். அவரும் வண்டியில் அமர்ந்து வரலாம். ஆனால் யார் சொல்வியும், கேட்காமல், மேல்துண்டை எடுத்துக் கருப்புச்சட்டைக்கு மேல் இடுப்பில் கட்டிக்கொண்டு, தேர்வடம் பிடிப்பது போல், ரதத்துக்கு முன்பாக நடந்தும் ஒடியும் வருகிறார் அய்யா; அவருக்கு ஈடுகொடுத்து நானும்! அண்ணாவுக்கு ஆச்சரியமான புன்னகை முகம் முழுதும்! சம்பந்தருக்குப் பல்லக்குத் தூக்கிய திருநாவுக்கரசர், அண்ணாவின் நினைவுக்கு வந்திருப்பார் போலும்!

அதன் பிறகு அய்யா அவ்வளவு நடந்து நான் பார்க்க வில்லை; அடுத்த 2, 3 ஆண்டுகளில் மேடையில் நின்று