பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உலகப் புகழ்பெற்ற படம்

“காலையிலே நேரத்தோட புறப்பட்டுப் போங்க சார்! அப்பதான் காஞ்சிபுரம் போயி, படம் எடுத்துகிட்டு, மத்தியான சாப்பாட்டுக்கு இங்கே திரும்பிடலாம்” என்று கலைஞர் விரைவு படுத்தினார். சாப்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டால்தான் எனக்குச் சுறுசுறுப்பு வரும் என்பது அவரது (தவறான) கணிப்பு?!

“அப்படியா? இதோ புறப்பட்டேன்! எப்படியோ படம் எடுத்துகிட்டுதான் திரும்புவோம். ஆனா, எப்பத் திரும்புவோம் என்பது, எங்க கையிலே இல்லியே!” என்றேன்.

“இல்லே சார். அண்ணாவிடம் சொல்லியிருக்கிறேன், நீங்க கிளம்புங்க!” என்று தூண்டினார்.

உடனே ஒடிச்சென்று முன்சீட்டில் அமர்ந்தேன். ஃபியட்காரில் அதுதானே வசதி! பின் சீட்டில் புகைப்பு. நிபுணரும், அப்போது ஓரளவுதான் பருமனாயிருந்தவரும்இப்போது இருமடங்கு பெருத்து விட்டவருமான சுபாசுந்தரம், கேமரா சகிதம், முரசொலி யின் அதிகார பூர்வமான பிரதிநிதியாகத் தம்பி செல்வம்.

நேரே அண்ணா வீட்டில் போய் இறங்கினோம். உள்ளே போனதும், முற்றத்தின் முன்புறக் குறட்டின் மீது, ஒரு சாய்வு நாற்காலி (Easy chair)யில் அண்ணா ஒய்வாக அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் வேட்டி, மேலே வெற்றுடம்பு, கலைந்த தலை, மூன்று நாள் சவரத்தைக் காணாமல் முகத்தில் வெள்ளிக் கம்பிகள் முளைவிட்டிருந்தன.