பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் நடிகை தேர்வு!

“மாயவரத்தில் நீங்கள் ஒரு நாடகக் குழு அமைத்து, இயக்க நாடகங்கள் நடத்தி வருவதாகவும், அதில் பெண் வேடமிட்டு நடிக்கும் இரண்டு மூன்று நடிகர்களுக்கு நல்ல வேடப் பொருத்தமும் நடிப்புத் திறமையும் இருப்பதாகவும் அண்ணாஅவர்களுக்குச் செய்தி வந்திருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு காஞ்சிக்கு வருமாறு, அண்ணா உங்களுக்கு எழுதச் சொன்னார்கள். எப்போது வருகிறிர்கள்?”

இப்படி ஒரு கடிதம் எனக்கு வந்தது. நான் எப்போது நாடகம் எழுதினேன்? நடத்தினேன்? இரண்டுமே தவறு: அப்படியானால் அண்ணா சொன்னது தவறா? அதுவும் தவறில்லை! என்ன இது குழப்பம்?

மாயவரத்தில் தீ. ப. நாதன் என்று ஒரு தோழர், திராவிடர் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இன்றுள்ள பல தோழர்களுக்கு அவர் முன்னோடி. அவர் ‘பசி’ என்று ஒருநாடகம் எழுதி, இயக்கி, நடத்தினார். கழகத் தோழர்கள் பலர் நடித்தனர். நாடக அமைப்பில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. என்னிடம் வந்தார். நான் சில திருத்தங்கள் செய்து, கழகக் கருத்துகள் நிறைய இடம் பெறச் செய்தேன். சில பாடல்கள் எழுதினேன். மாயூரம் சவுந்தர் (மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு நிர்வாகியாகப் பின்னாளில் இருந்தவர்) இசையமைத்தார். நடிகர்கள் சொந்தக் குரவில் பாடினர். நண்பர் E. V. K. சம்பத் அவர்கள் தலைமையில் முதல் நாளும், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் இரண்டாம் நாளும் நாடகங்கள் நடத்தி, வெற்றியுடன் முடித்தோம்.