பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பார்த்தேன்—சந்தித்தேன்—உரையாடினேன்!

றிஞர் அண்ணா அவர்களை முதன் முதலில் நான் எப்போது சந்தித்தேன்? அல்லது எப்போது பார்த்தேன்? அல்லது எப்போது பேசினேன்? இதயத்தில் இடம்பெற்று நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டிய நிகழ்ச்சி அல்லவா!

என்ன முட்டாள்தனமாக உளறுகிறேன்; இன்னும் இந்த மூடநம்பிக்கை அகலவில்லையே! அறிவியல் உரம் பெற்று வளர்ந்துள்ள இந்நிலையிலும், கவிஞர் கற்பனைக் கூற்றுகளை மெய்போல் கையாளுவதா? நெஞ்சின் ஒரு பகுதியில் இருக்கும் இருதயம், இரத்தத்தைத் துாய்மைப் படுத்தும் பணி ஒன்றை மட்டுமே செய்யக் கூடியது! நினைப்பதற்கும் மறப்பதற்கும் உரிய கருவிகள் நிலை கொண்டிருப்பது, மூளையின் கோடிக்கணக்கான நரம்பு மண்டலத்தின் ஏதோ ஒரு பகுதியில்தான், என்பதல்லவா விஞ்ஞான உண்மை!

திருத்திக் கொள்வோமா? உறங்கிக் கொண்டிருக்கும் நினைவாற்றல் உணர்வுகளைத் தட்டி எழுப்பி நடக்க விடுகிறேன், மூளையைக் கசக்கி!

1942-ஆம் ஆண்டு தஞ்சையில் பள்ளியிறுதிப் படிப்பு முடித்துக், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் சேர்ந்த சமயம், என் சிறிய தகப்பனார் மகளைப் பட்டுக் கோட்டையில் திருமணம் செய்து கொடுத்தோம். அந்த மாப்பிள்ளை மாரிமுத்து பெரியவீட்டுப் பிள்ளை. அவர் அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது,

அ.—5