பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

67


வீட்டில் தங்கவைத்த மாணவர்களாகிய எங்களிடம், “காலையில் வாருங்கள்” என்று சொல்லி உறங்கச் சென்று விட்டார் அண்ணா.

10 மணிக்கு வி. சி. வீடு சென்றேன் நான் மட்டும். ஒரு மேசைக்கு முன்னர் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார் அண்ணா. எதிரில் போய் நின்று, வணக்கம்’ என்று கைகுவித்தேன். எங்கள் கல்லூரி பிரின்சிபால் டாக்டர் கே. சி. சாக்கோ முன்னிலையில் கூட நான் இவ்வளவு பயத்தோடு நின்றதில்லை; அவர் தான் எங்களிடம் பயந்து போயிருந்தார்!

“உக்காருங்க. உங்க பேரென்ன?"—அண்ணா.

“உட்காருங்கள். உங்கள் பெயர் என்ன?” —ஆகா! எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதன் நான்; விசுவரூபம் எடுத்த வாமனன் போல! அண்ணாவே என்னை வாங்க போங்க’ என்கிறாரே-பெருமை பிடிபடவில்லை! அந்த விரிந்து பரந்த நெற்றியின் கீழே கரிய பெரிய விழிகளின் காந்த மின்ஆற்றல், என் சிறிய கண்களான இரும்புத் துண்டைக் கவ்வியிழுக்க, அப்படியே போய் ஒட்டிக் கொண்டேன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு. அந்த ஒரு முறை-ஒரே முறைதான் அண்ணா என்னை ‘வாங்க போங்க’ என்றது. அதன் பிறகு இந்த ‘அந்நியத்தனம்’ அகன்றது. ‘வாய்யா போய்யா’ எனும் அந்நியோந்தியம், பிறந்து விட்டது. நானும் வணக்கம் சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.

தன்வயமிழந்த நிலையில் தடுமாறித் தத்தளித்து, ஒரளவு தெளிவு வரப்பெற்று, “என் பெயர் கருணானந்தம், சீனியர் இண்ட்டர் படிக்கிறேன் அண்ணா: காலேஜ் லிட்டரரி அசோசியேஷன்ல, மாலை 3 மணிக்குப் பேசப் போறீங்களே—தலைப்பு என்னண்ணு கேட்டு வரச் சொன்னார் பிரின்சிபால்!“