உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


இன்னின்ன புத்தகங்களைப் படித்ததாக ஏற்பட்டால் தான், உள்ளத் தூய்மையும், மேதையும் இருப்பதாக உலகு கருதும் என்ற எண்ணம் கொண்டு சிலர், சில புத்தகங்களைக் குறிப்பிட்டுக் கூறுவதுண்டு எழுச்சியுடன்.

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்.”

“திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலிவாலே, ஒருத்தரை மதிப்பதில்லை உந்தன் அருளாலே.”

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, நைடதம் புலவர்க்கு ஔடதம். கல்லாடம் படித்தவருடன் சொல்லாடாதே.” —என்றெல்லாம் வழங்கப்படும் புகழ் மொழிகளை மட்டும் கொண்டே புத்தகப் பட்டியலைத் தயாரித்துவிட இன்றைய உலகம் தயாரில் இல்லை.

அறிவுத் துறையின் முனைகள் இப்போது ஒன்று பலவாகப் பெருகியபடி இருக்கிறது. பல்வேறு துறைகளிலே உள்ள பிரச்சினைகளிலே, தெளிவும், பண்பாட்டுக்கு ஓர் விளக்கமும், சமுதாய அழைப்பு முறை, அரசு அமைப்பு முறை, அறநெறி ஆகியவை பற்றிய கருத்துரையும் ஒருங்கே கொண்டதாய், மக்களை, அறிவும் ஆற்றலும் அறமும் கொண்டவர்களாக்க வல்லதாய், அமைந்துள்ள, பெருநூல், இன்று நமக்கிருப்பது திருக்குறள். நமது உள்ளத்தைக் கவருவது மட்டுமல்ல. திருத்தவும் உதவுவது. எனினும், அறிவு ஒரு தொடர் கதை—அதற்கு ஆசிரியர்கள், தொடர்ந்து தோன்றியபடி இருக்கிறார்கள்.—இனியும் தோன்றுவார்கள்—உள்ளங்கவர் புத்தகங்கள் மேலும் பலப்பல வெளி வந்தபடிதான் இருக்கும்.