உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


அதிலேறிச் செல்லும் இடத்திலே அவர்கள் தரிசிக்கப் போகும் கருணானந்த சுவாமிகளின் கால்பட்ட தண்ணீர் கர்ம நோய்களைப் போக்கும் என்ற கதை பேசத் தெரியும்.

இது நமது மக்களின் மனவளம். இவர்கள் பெரும்பாலோர். இவர்களைக் கொண்டுள்ள நம் நாடு அழிவுச் சக்தியில் அணுகுண்டு உற்பத்தியும் ஆக்கவேலைச் சக்தியில் சந்திர மண்டலத்திற்குச் சென்றுவரும் ஆராய்ச்சியும் நடத்திக்கொண்டுவரும் உலகிலே ஓர் பகுதி சரியா? நாட்டில் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட யாரும், இந்த நிலை சரி என்று கூறமாட்டார்கள். சரியல்லதான். ஆனால் என்ன செய்வது என்று கேட்பர்? வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும்—மக்களின் மனதிலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்கூட அல்ல— அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.

வீடுகளிலே நடைபெறும் விசேஷங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும்போது புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக் கொண்டால் சுலபத்தில் ஒரு சிறு புத்தகசாலையை அமைத்துவிடலாம்.

புத்தகசாலை அமைக்கும்போது, ஏற்கெனவே நமது மக்களின் மனதிலே ஊறிப்போய் உள்ள அர்த்தமற்ற, அவசியமற்ற கேடே கூடச் செய்யக்கூடிய எண்ணங்களை நிலை நிறுத்தக்கூடிய ஏடுகளைச் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் மனவளம் ஏற்படாது. மனம் சதுப்பு நிலமாகும். பழமைப் புழுக்கள் நெளியுமிடமாகும்.

புத்தகசாலை அமைப்பது என்று திட்டமிட்டுப் புது வருஷப் பஞ்சாங்கத்தில் ஒரு மூன்று தினுசும், பழைய பஞ்சாங்கக் கட்டு ஒன்றும், பவளக்கொடி மாலையும், பஞ்சாமிர்தச் சிந்தும், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையும், பேய் பேசிய புராணமும், நல்லதங்காள் புலம்பலும், அரிச்சந்திரன் மயான காண்டமும் ஆகியவற்றை அடுக்கிவைத்தால், நாம் கோரும் மனவளம் ஏற்-