உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


சொல்லுகிறபடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும், சொன்னபடி செய்யக்காணோம் ஏன்? என்று கேட்கும், விழிப்புணர்ச்சி மக்களுக்கும் ஏற்படவேண்டும். இந்த ஆளவந்தார்களைப் போல, மக்களைச் சீர்கேடான முறையிலே நாங்கள் நடத்த மாட்டோம்; சுதந்தரத்தைப் பறிக்க மாட்டோம் எம்மை ஆட்சியாளராக்கினால் என்று கூறி, பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட, மற்றோர்கட்சி இருக்கிறதென்றால்தான் ஆள்பவர்கள் மக்களின் சுதந்தரத்தை மதித்து நடக்க முன் வருவார்கள்.

இவைகளைச் சாதிக்க, மக்களுக்கு, உள்ளத்தில் உரம் வேண்டும். உணவு, உடை, உறைவிடம் எனும் இம்மூன்று அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கே, உடலும் உள்ளமும், உருக்குலையும் அளவு பாடுபட்டால் தான் முடியும் என்ற கேவல நிலையில் மக்கள் இருந்தால், அவர்களுக்கு உள்ள உரம், எப்படி ஏற்படும்.

அரிசிப் பஞ்சமும் அமெரிக்கா நாட்டுப் பிரச்சினையும், ஒருசேர மக்களின் முன்பு வந்து நிற்கும்போது, அமெரிக்கத் தேர்தலைப்பற்றி அல்ல, அரிசி விஷயமாகத்தான் மக்களால் அதிகமான அக்கறை காட்டமுடியும்.

மக்களாட்சி முறைக்குத் தேவையான, தேர்தல் யந்திரத்தையே விலைக்குவாங்கி விடக்கூடிய அளவு பொருளாதார பலம் சிலரிடமும், செக்குமாடென உழைத்தால்தான் வாழவே முடியும் என்ற நிலையுள்ள பொருளாதாரப் பீடை பலரிடமும் இருக்கும் பொருளாதார பேதமுறை ஒழிய வேண்டும்.

இவ்வளவும் நடைபெற்றால்தான், உண்மைச் சுதந்தரம் மலரும்—மக்கள் சமுதாயம் மிக்க கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த மக்களாட்சி முறை, இன்ப புரிக்கு ஏற்ற இலட்சியப் பாதையாகும்; நாடு புன்னகைப் பூங்காவாகும்.


[இவ்வரிய சொற்பொழிவைப் புத்தக வடிவாக்க உரிமை தந்த சென்னை வானொலி நிலையத்தாருக்கு எமது நன்றி.]