உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


கிறான். எவ்வொருவரும் மற்ற யாவருக்கும் சேர்த்தே நீதி நியாயம் கேட்கிறார்கள். ஸ்தாபனத்தின் முக்கிய இலட்சணம் இதைப் பொறுத்தே இருக்கிறது. ஸ்தாபனத்தின் மூலம் அதைச் சேர்ந்தவர் அனைவருக்கும் நலன் கிடைக்கிறது என்பது விளக்கமானால்தான், ஸ்தாபனத்திலே ஐக்கிய உணர்ச்சி இருக்க முடியும்—கந்தனுக்குத் தெரியாமல் முருகனும், முருகன் அறியாவண்ணம் முத்தனும், தனித் தனியே நடவடிக்கையை எடுத்தால், ஸ்தாபனம் உடைந்து படும். பொதுத் தன்மைதான் ஸ்தாபனத்துக்கு அரண்.

இந்தப் பொதுத்தன்மை பலமாக இருக்கவேண்டுமானால், ஸ்தாபனம், மிகமிக நியாயமான கொள்கைகளின்மீது கட்டப்படவேண்டும்.

குடும்பம் முதற்கொண்டு கோலோச்சும் சர்க்கார் வரையிலே, ஸ்தாபனங்கள்தான்—ஒருவகைப் பொதுத் தன்மை—பொதுவான—பணிகள் அனைவரையும் கட்டுப்படுத்தும் பொதுவான பொறுப்புக்கள், பலன்கள் இவைகளில் உண்டு. இதிலே எது கெடினும், ஸ்தாபனத்தின் ஐக்கியம் நிச்சயமாகக் கெட்டுவிடும்—அண்ணன் அறியாதபடி தம்பி செலவிடும் பத்து ரூபாய்,—அண்ணன் தம்பி என்ற பாசத்தால், சில நாட்களுக்குக் குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக்காமவிருக்கும்—ஆனால் சில காலத்துக்குத்தான்—எப்போதுமல்ல. தம்பியின் பழக்கமே அண்ணன் அறியாவண்ணம் தன்னலத்துக்காக நடந்து கொள்வது என்றாகிவிட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, எத்தனைவிதமான பந்தம் பாசம் பேசியும், பழைய கதைகளைச் சொல்லியும், இராமனையும் இலட்சுமணனையும் துணைக்கு அழைத்தும் முடியாததாகிவிடும்—குடும்பம், பிளவுறும்; பிரியும்—அண்ணன் தம்பிக்குள்ளாக ஒரு குடும்பத்திலேயே, இந்த நிலை என்றால், ஒரு ஸ்தாபனத்தில் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் அல்லது தலைவருக்கும் ஸ்தாபனத்தில் மற்ற ஐக்கிய உறுப்பினருக்குமிடையே, கடைசிவரையில் பாசம் ஒன்றை மட்டும் கொண்டு, அன்பு உண்டாக்கி ஸ்தாபனத்தை உடையாதபடி பார்த்துக்கொள்ள முடியாது. அமைப்புகளின் ஒற்றுமை, அதனைச் சார்ந்தவர் அனைவரும் ஒரே நோக்கம் கொண்டு, ஒரே வகையான குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாடுபடுபவர் என்பதைத்தான் பொறுத்திருக்கிறது. இந்த ஒற்றுமையும், போலியானதாக இருக்கக் கூடாது. இருப்பின் மிக மிகச் சாதாரணச் சங்கடமும் ஸ்தாபனத்துக்குப் பெரியதோர் இடையூறாகிவிடும்.

ஸ்தாபனம் ஏற்படச் செய்வதற்குக் கொள்கைகள் தேவை என்பது, கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய சாமான்கள் தேவை