உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


வது, ஆலமரத்துக்கு விழுது இருப்பதன் காரணம் போன்ற பள்ளிக்கூடப் பாடங்களெல்லாம், நமக்குக் கசப்பாகவும், அலாவுதீன் கதை, அலிபாபா கதை, ஆயிரம் தலை வாங்கியவள் கதை, கூடு விட்டுக் கூடுபாயும் கதை, காளி கூளிக்குச் சொன்ன கதை போன்றவைகள் சுவை தந்து, நம்மைக் கவர்ந்திருக்கின்றன.

என்னைக் கவர்ந்த புத்தகங்கள் இவை போன்றவை—அந்தப் பிராயத்தில்—துள்ளித் திரிந்த பள்ளிப் பருவ காலத்தில், எனக்கு மட்டுமா? உங்களுக்குந்தான்—கவனப்படுத்திப் பாருங்கள், தெருத் திண்ணையில் மாடத்தில் மங்கலாக அகல் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது—சுவற்றில் சாய்ந்தபடி, சுற்றும் முற்றும் என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், சிற்றெறும்பு கடித்தாலும் கவலைப்படாமல், படித்துக் கொண்டிருக்கும் காட்சி, கவனத்திற்கு வரும்.

மகிழ்ச்சி ஊட்டுவது, புதிய எண்ணங்களைத் தூவுவது பழைய கருத்துக்களை மாற்றுவது, பண்பு தருவது, செயல் புரியும் திறன் அளிப்பது என்பன போன்ற பயன்களைப் பெறுவதற்கே : படிக்கிறோம்—ஒவ்வொரு வகைப் புத்தகமும் ஒவ்வொரு பயனை, ஒவ்வோர் அளவுக்குத் தருவதுடன் நமது மனதை உருவாக்க உதவுகின்றன. மகிழ்ச்சியூட்டும் புத்தகம், செயலாற்றும் திறனைத் தந்தே தீருமென்றோ புதிய எண்ணத்தைத் தூவும் ஏடு, மகிழ்ச்சி ஊட்டக் கூடய இனிய நடை அழகுடன் இருந்தே தீருமென்றோ கூறமுடியாது.

நாரதரின் கானம் பற்றியோ, தேவலோகக் காட்சி பற்றியோ, சுவை தரும் விதமாகத் தீட்டப் பட்ட ஏட்டினைப் படிக்கும் போது, ஒரு வகை இனிமை ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் புதிய எண்ணம், விழிப்பு, செயலாற்றும் தன்மை ஏற்படுவதில்லை. பக்திப் பரவசத்துடன் அந்த ஏடுகளைப் படிப்போரும், போய்ப் பார்த்து விட்டே வரவேண்டும் நாரதரை என்று பயணப்படுவதில்லை. மலேயாவைப் பற்றிய வரலாற்றுப் புத்தகத்திலே சுவை இருக்காது. எனினும், படிப்பவர்கள் வசதி கிடைத்தால், அங்கு