உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


அண்ணா :– வெடி, வாணம், இவைகளை வியாபாரம் செய்கிறவர்கள்கூட, பக்தி மார்க்கத்தில் மக்களை ஈடுபடச் செய்யவும், கடவுளின் கருணையைப் பெறவுமேதான், எத்தனையோ ஆயிரம் தொழிலிருக்க, வெடி வாணம் தயாரித்துத் திருவிழாக்களுக்கு விற்கும் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறுகிறார்கள்.

ம. பொ. சி :– அது போலத்தான், ஒவ்வொரு தொழிலுக்கும் கூறுவார்கள். ஆனால் உண்மையிலே பொதுநலனுக்குப் பாடுபடும் விதமாகப் பல தொழில்கள் அமைவதில்லை. ஏராளமான விளம்பரங்களைச் சுமந்துகொண்டு, சொகுசாக வாழும் பத்திரிகைகள், அந்த விளம்பரங்களின் மூலம் இலாபம் பெறுகின்றனவே தவிர, பொதுமக்கள் அடையும் பிரதான பலன் என்ன?

அண்ணா :– அப்படியானால், விளம்பரம் அதிகம் வெளியாகும் பத்திரிகைகள், பொதுச் சேவை புரிபவைகள் அல்ல என்று தீர்மானித்து விடலாமா?

ம. பொ. சி :– அறுதியிட்டுக் கூறிவிட முடியுமா? பொதுவாக, இதனைக் கூறலாம். வெறும் செய்திகளை, அதிலும் மக்களுக்குள்ள குறைபாடுகளை ஒழிக்கப் பொதுநலனை வளர்க்கப் பயன்படும் செய்திகளைத் தாராமல், பொழுது போக்குக்கும், மனக்கிளர்ச்சிக்கும், வம்பளக்கும் பழமை மோசத்துக்கும் பயன்படும் செய்திகளையும், வருவாய் தரும் விளம்பரங்களையும் ஏராளமாகக்கொண்டு வெளிவரும் பத்திரிகைகள் நடத்துபவர்களுக்கு, இலாபம் தரும் சொந்தத் தொழில்தான்; சந்தேகமில்லை. செய்திகளைத் தருவதும், பொதுமக்களுக்கு ஒருவிதப் பணிதானே.

அண்ணா. :– அது, தரப்படும் செய்திகளைப் பொறுத்திருக்கிறது. மன்னர்களின் கோலாகல வாழ்வு, ஆடையலங்காரம், அரண்மனை விசேஷம், அங்கு நடைபெறும் விருந்து, களியாட்டம் ஆகிய செய்திகளை விளக்கமாகவும், விதவிதமாகவும், வனப்புடனும், படங்களுடனும் வெளியிடுகிற முறையிலே மக்களின் மனதுக்குத் தெளிவோ, அறிவுக்கு வளர்ச்சியோ ஏற்படப் போகிறதா? அவைகளைப் படிப்பதாலே, நாட்டு மக்களின் வாழ்விலே என்ன நற்பலன் காணமுடியும்?

ம. பொ. சி :– ஒன்றுமில்லை. பொழுது போக்குத்தான்; உல்லாசம் தான்.

அண்ணா :– இவ்வகையிலே ஒரு பத்திரிகை வெளிவந்தால் ஏராளமான பிரதிகள் செலவாகக்கூடும். ஆனால் பொதுச் சேவை-என்று இதனைக் கருத முடியாதல்லவா? மாந்திரிகம் சோதிடம்,