உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


தருகின்றன. ஆனால் அந்த ஏடுகளிலேயே, அவன் தேடும் இலட்சியம் முழுவதும் இருப்பதில்லை. பருவம் மாறுகிறது.

மாசறு முத்தே! வலம்புரிச்சங்கே!! என்று அன்புரை கூறிக் கண்ணகியுடன் கோவலன் கொஞ்சிடும் காட்சியும், கடலாடும் காட்சியும் "அறநெறி அழித்த நானோ மன்னன்! யானே கள் வன்!!" என்று பாண்டியன் பதறி இறந்திடும் காட்சியும், நெஞ்சை அள்ளும் இன்னோரன்ன பிற காட்சிகளும் கொண்ட சிலப்பதிகாரம், உள்ளத்தைக் கவர்ந்திடத்தான் செய்தது. ஆனால், பருவம் மாறுகிறது. புத்தகப் பட்டியலும் மாறுகிறது.

ஆற்றல் வளரும் பருவத்தை அடைந்ததும், வீரச் செயல்கள், களக்காட்சிகள், அரசு அமைக்கும் அருஞ்செயல்கள், ஆகியவைகளைப் பற்றிய புத்தகங்கள் பெரிதும் கவர்ச்சி தருகின்றன. அலெக்சாண்டரின் ஆற்றல், ஜூலியஸ் சீசரின் வீரம், நெப்போலியனின் போரார்வம், பேரரசுகள் அமைந்த விதம். அழிந்த வகை ஆகியவை பற்றிய நிகழ்ச்சி நிகண்டுகள் மனதைக் கவர்ந்ததுடன், தாய்நாட்டில், தமிழகத்தில், அத்தகைய மாவீரர்கள், மணிமுடி தரித்த மன்னர்கள், கடல் கடந்து சென்று வெற்றிக்கொடி நாட்டிய வேந்தர்கள், ஆகியவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், தாய்த் திருநாட்டின் தனிச்சிறப்பை உணர்ந்து உலகுக்கு உரைக்க வேண்டும், என்று ஆர்வம் கிளம்பி, தமிழ்ச் சுவடிகளைத் துருவிப் துருவிப் பார்க்கவும், தமிழ் அறிஞர்களிடமெல்லாம் பாடம் கேட்கவும் எண்ணம் பிறந்தது. அங்கொன்றும் இங் கொன்றுமாகச் சிறு குறிப்புக்களும், இமயம் முட்டிய வீரத்தைப் பற்றிய இனிய பாடல்களும், கனக விசயன் தலையில் கல்லேற்றிய கதையும், கங்கையும் கடாரமும் கொண்டது பற்றிய கல்வெட்டுகளும், கரிகாலன், ராஜ ராஜன், குலோத்துங்கன், ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன், ஆடலரசன், ஆட்டனத்தி, என்று வரும் பெயர்ப்பட்டியலும் கிடைத்தனவேயன்றி, மற்ற நாட்டு மாவீரர்களின் வரலாறுகள் போலக் கட்டுக் கோப்பாக இன்னமும் கிடைக்கவில்லை. கிடைக்காத காரணத்தால் செயலாற்றும் பக்குவத்தில் உள்ள வீர இளைஞர்களின் மனதைக் கவரக்கூடிய மகத்தான சாதனத்தைப் பெற முடியாமல் போய்விட்டது.