பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரமும் ஈகையும்

19

யும் சொல்லச்சொல்லிக் கேட்டான்.[1] புலவரும் வள்ளலும் மனம் கலந்து உறவாடினார்கள். பிறகு பலபரிசில்களைத் தந்து அப்புலவர் கோமானை அனுப்பினான் தகடூர் மன்னன்.

அதன் பின்பு எந்தப் புலவர் வந்தாலும் உடனே கண்டு அகமும் முகமும் மலர்ந்து குலாவத் தொடங்கினான் அவன். அவர்களை எந்தவகையிலும் புறக்கணிக்காமல் பழக வேண்டும் என்று உறுதி பூண்டான். இதன் பயனாக அவனை நோக்கிப் பல பல புலவர்கள் வந்தார்கள்; பரிசில் பெற்றுச் சென்றார்கள். சிலருக்குப் பொன்னும் பொருளும் அளித்தான். சிலருக்குக் குதிரை கொடுத்தான். சிலருக்கு யானையை வழங்கினான். சிலருக்குத் தேரை ஈந்தான். அவனுடைய வீரத்தைத் தமிழுலகம் அறிந்ததுபோல ஈகையையும் உணர்ந்து பாராட்டியது.


 1. குன்றும் மலையும் பல பின் ஒழிய
  வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
  நின்ற என் நயந் தருளி, ஈது கொண்டு
  ஈங்கனம் செல்க தான்என என்னை
  யாங்கறிந் தனணோ தாங்கருங் காவலன்?
  காணாது ஈந்த இப்பொருட்கு யான் ஓர்
  வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
  தினையனைந் தாயினும் இனிது, அவர்
  துணையன வறிந்து நல்கினர் விடினே.

  -புறநானூறு, 208.

  [பரிசில் கொண்டுசெலற்கு வந்தனென் என. நயந்து-விரும்பி. தான்-அவன் (புலவன்.) வாணிகப் பரிசிலன்-பொருள் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட புலவன். பேணி-பாராட்டி. தினையனைத்து-தினையவ்வளவு. துணை அளவு அறிந்து-புலமை அளவைத் தெரிந்து கொண்டு. நல்கினர் விடின்-பரிசளித்து வழியனுப்பினால்.]