பக்கம்:அநுக்கிரகா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

ஆவலோடும் பரபரப்போடும் அவர் பொன்னுரங்கத்தைக் கேட்டார்: "எதனாலே கைக்கெட்டினது வாய்க்கு எட்டாமப் போனாலும் போகலாம்ன்னு சொல்றே?"

"காரணம் இருக்குங்க? கனிவண்ணனும் ம.மு. க. விலே என்னை மாதிரியே ஒரு கிங் மேக்கர்! அவன் ஏதாச்சும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டே இருப்பான். உங்க மகளைக் கட்சியிலே சேராமத் தடுக்கப் பார்த்தாங்க. முடியலே. எம்.எல்.ஏ. டிக்கெட் கிடைக்காமத் தடுக்கப் பார்த்தாங்க. அதுவும் முடியலே. எலக்சன்ல ஜெயிக்க விடாமப் பண்ணிடலாம்னு பார்த்தாங்க. பலிக்கலே. ஜெயிச்சாச்சு. மந்திரிப் பதவியும் கிடைக்கப் போகுது. அதுவும் வீட்டு வசதி மந்திரி பதவியே கிடைக்கப் போறது அவங்க எரிச்சலை இன்னும் அதிகமாக்கும்."

"எரிச்சல் அதிகமாகி என்ன செய்ய முடியும்? தோத்துச் செல்லாக் காசாத் தேஞ்சு போனப்புறம் செய்ய என்ன இருக்கு?"

“அங்கேதான் ராங் பண்றீங்க. அதாவது தப்புக் கணக்கு போடறீங்க, நான் முன்னாடியே உங்களுக்குப் பல தடவை சொல்லியிருக்கேன். ஜெயிக்கிற கனிவண்ணனை விடத் தோற்கிற கனிவண்ணன் அபாயகரமான ஆள்னு."

"ஆமாம், சொல்லியிருக்கே. எனக்கும் நெனைவிருக்கு. ஆனா, இனிமே அவன் நம்மை என்ன பண்ணிட முடியும்?” என்று அநுக்கிரகாவே கேட்டாள்.

"முடியுங்க! உங்க வீட்டைச் சுற்றி இருக்கிற குடிசைகளுக்கு அவனே ஆளைத் தூண்டி விட்டு ராத்திரியோட ராத்திரியா நெருப்பு வச்சிட்டு, நீங்கதான் நெருப்பு வைக்க ஏற்பாடு பண்ணினீங்கன்னு துஷ்பிரசாரத்தைக் கிளப்பி, குடிசைகளை அகற்றுவோம் என்று அன்று சொன்னார்கள், இன்று ஜெயித்ததும் செய்து காட்டுகிறார்கள். ஏழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/112&oldid=1264009" இலிருந்து மீள்விக்கப்பட்டது