பக்கம்:அநுக்கிரகா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அநுக்கிரகா

அலைஞ்சு பாடுபடணும்மா! உன் பேரை நிஜமாக்குகிற மாதிரி ஏழை பாழைக்கு அநுக்கிரகம் பண்ணணும்."

"நிச்சயமாப் பாடுபடுவேன். என்னை நம்புங்க. உலக பாங்க் உதவியோடு நிறைய அடுக்கு மாடி வீடுகளைக் கட்டித் தவணை முறையில் ஏழைகள் பணம் கட்டி வீடு அடைகிறாற் போல வழி செய்வேன் உங்க அறிவுரையை மறக்க மாட்டேன்."

"ரொம்பக் கரெக்ட்! நீ பாடுபடறதைப் பார்த்து உன்னை, ஏழைகளின் ரட்சகி'ன்னு மத்தவங்க கொண்டாடணும்! அநுக்கிரகம் செய்கிற இவளுக்கு அநுக்கிரகான்னு பெயர் வச்சது எத்தினி பொருத்தம்னு ஜனங்க கொண்டாடணும்."

★ ★ ★

அன்று மாலை அநுக்கிரகா தன் தந்தையிடம் சிறிது நேரம் தனியாகப் பேச வேண்டும் என்றாள். அவள் கேட்ட தினுசைப் பார்த்து முத்தையாவே சந்தேகப்பட்டார். என்னவோ, ஏதோ என்று தயங்கவும் செய்தார்.

"நீ மினிஸ்டராயாச்சு! நம்ம தோட்டத்திலே போலீஸ் சென்ட்ரி கூடாரம் போட இடம் ஒதுக்கச் சொல்லணும். இங்க வர்ற வழி எல்லாம் ஒரே குப்பையும், குடிசையும், சாக்கடையும், கக்கூஸுமா அசிங்கப்படுத்தியிருக்காங்க. உன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதை எல்லாம் கிளியர் பண்ணிச் சுத்தமாக்கணும், ஒரு மினிஸ்டரோட வீடு—அதுவும் ஹவுஸிங் மினிஸ்டரோட வீடு சாக்கடையும் கொகவுமா இப்பிடி இருக்கக் கூடாது." பேசிக் கொண்டே அவளோடு தனியறைக்கு நடந்தார் அவர். ஏ. சி. செய்த அந்த அறையில் அப்போது தந்தையும் மகளும் மட்டுமே இருந்தனர். வேறு ஈ கொசு கூட கிடையாது.

மெல்ல அநுக்கிரகா தொண்டையைக் கனைத்து இருமிக் கொண்டு தொடங்கினாள்:

"இனிமே இப்படி ஐம்பது ஏக்கர் நிலத்தில் தோட்டமும், துரவுமா இருக்கிற இந்த ஆடம்பர அரண்மனையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/116&oldid=1264100" இலிருந்து மீள்விக்கப்பட்டது