பக்கம்:அநுக்கிரகா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அநுக்கிரகா

-களின் பட்டியலே இல்லாதது துரதிர்ஷ்டமாயிருந்தது அரசியலில் ஈடுபடுமுன் அநுக்கிரகாவுக்கு முத்தையா இதை விளக்கினார். அவர் விளக்காமல் மீதம் விட்டிருந்தவற்றைப் பொன்னுரங்கம், புலவர் கடும்பனூர் இடும்பனார் போன்றவர்களிடமிருந்து தெரிந்து கொண்டிருந்தாள். தமிழ் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் பரவா யில்லை , 'நான் தமிழன், தமிழச்சி-என் இரத்தம் தமிழ் இரத்தம்-சதை தமிழ்ச் சதை- நரம்பு தமிழ் நரம்புஎலும்பு தமிழ் எலும்பு' என்று பேசியே தமிழ்நாட்டில் காலம் தள்ளிவிடலாம் என்பது புரிந்திருந்தது. அநுக்கிரகா போன்ற தமிழே படிக்காத பெண்ணுக்கு இந்த நிலைமை மிகவும் உதவியாகவும், அநுசரணையாகவும் இருந்தது. அவளுடைய அந்த நெல்லுப்பேட்டை மண்டி மைதானத்துப் பிரசங்கத்துக்கு ஆரம்பம், முடிவு முதலிய பாணிகளைப் புலவரிடம் கேட்டுக்கொண்டு நடுவே பேச வேண்டியதைத் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தாள் அவள். ஆனாலும், புலவரோ, பொன்னுரங்கமோ, முத்தையாவோ அவளைக் கண்ணைக் கட்டி, நடுக்காட்டில் விட்ட மாதிரி அப்படித் தனியே விட்டுவிடத் தயாராகயில்லை . ஒரு கூட்டுத் தயாரிப்பாகக் கலந்து பேசிப் புலவருடைய கையெழுத்தில் ஒரு முழு நீளப் பேச்சைத் திட்டவட்ட மாக அவளிடம் எழுதிக் கொடுத்திருந்தனர். தற்செயலாகப் புரட்டிப் பார்த்து அதில் ஓரிரு வார்த்தைகளைத் தவிர மற்றவை தன் வாயில் நுழைய முடியாத அளவு கடுமையாகவும், பல்லை உடைப்பனவையா கவும் இருப்பதைப் பார்த்துப் பயந்தாள் அநுக்கிரகா.

"சீவக சிந்தாமணிச் சிங்கமே, சீறி எழு! சிறுத்தையே, பொறுத்தது போதும்! பொங்கி எழு! புறநானூற்றுப் புலியே, புறப்படு! அகநானூற்று யானையே, மதம் கொள்! என்கிற பாணியில் ஆரம்பமாயிற்று புலவர் அவளுக்குத் தயாரித்திருந்த பிரசங்கம், அநுக்கிரகா புலவரைக் கேட்டாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/42&oldid=1256644" இலிருந்து மீள்விக்கப்பட்டது