பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அன்னக்கிளி

-தாள். அன்னக்கிளியின் அருகில் சென்று 'என்னடி பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டு? அவ்வளவு ஆணவமா உனக்கு?' என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். தொடர்ந்து வந்த பேச்சு பெரியவளின் சின்னத்தனத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்தது.

'சில நாட்களாகவே உன் போக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. திருமாறன் கூறியதுகூட உண்மையாக இருக்குமோ என்னவோ! அவருக்கு நான் உன்மூலம் அனுப்பிய கடிதத்தை நீயே ஆந்தையிடம் காட்டியிருக்கலாம்...'

அன்னக்கிளி திடுக்கிட்டாள். 'அம்மா! வீண் பழி சுமத்தாதீர்கள்' என்று இதயத்தைத் தொடக்கூடிய உணர்ச்சிகரமான குரலில் அலறினாள்.

ஆயினும் அமுதவல்லியின் உள்ளம் கல்லாகத்தான் இருந்தது. அன்னக்கிளியின் இதயத்தைக் குத்திப் புண்ணாக்க வேண்டும். அந்த அபலைப் பெண்ணை அழ அழ வேதனைப்படுத்தி மகிழ்வடைய வேண்டும் என்று பெரியவள் ஆசை கொண்டதாகவே தோன்றியது. அவளது மனத்தின் இருண்ட ஆழத்திலே அத்தகைய வெறிநினைப்பு வெகு நாட்களாகவே உறங்கிக் கிடந்திருக்கவேண்டும். பொறாமைதான் அதன் அடிப்படையாகும்.

அவள் சொன்னாள்: 'ஆந்தையின் நட்பைப் பெறுவ தற்காக அவ்விதம் செய்திருக்கலாம். இங்கிருந்து அவதியுறுவதைவிட அவனோடு சேர்ந்து கடற் பிரயாணம் செய்து அயல் நாடுகளில் சுற்றித் திரியலாம் என்று நீ ஆசைப்பட்டிருக்கலாம். யார் கண்டது?'