பக்கம்:அபிதா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 O லா. ச. ராமாமிருதம்

 A Selfmade Man. அவன் சூழ்நிலைக்கு ஒவ்வாது உயர்ந்த ரகத் துணி கண்ணைப் பறிக்கும் சலவை. உருளைக்கிழங்கு வறுவல் பில்லைபோல் பெரிய Wrist Watch. புதிதாகக் கண்ட சுகம். ஆத்திரத்துடன் அனுபவிக்கிறான். அனுபவ ஞானத்தைத் தவிர வயிற்றைக் கீறினால் அக்ஷரம் தேறுமோ சந்தேகம். இவனுக்கு, இப்போ சொந்தமாகியிருக்கும் இந்த Tent சினிமாவிலேயே இவனே “வெற்றிலை பாக்கு பீடி சிகரெட்டு” கணீரென்று சிலும்பலற்ற குரலில் விற்றிருப்பான் என்றால் எனக்கு ஆச்சர்யமில்லை.

ஆனால் என் வாழ்வும் அப்படித்தானே! அதனாலேயே நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் விளக்கமில்லாமலே ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். கோதாவில் மல்லர்கள்போல், ஒருவனையொருவன் கட்டிப் பிடித்துப் புரளுமுன் ஒருவனையொருவன் ஆழம் பார்த்துக்கொண்டு ஒருவரையொருவர் வளைய வருகிறோம். என்னைப் போல் அவனைக் காண எனக்கு ஏன் ஆகவில்லை: அவனைப்போல் நான் இல்லை என்கிற ஆத்திரம்தானே? குழந்தையின் முகத்தெதிரே கயிற்று நுனியில் பொம்மையைத் தொங்கவிட்டு ஆட்டுவதுபோல் அபிதாவுக்கு சினிமா ஆசை காட்டுகிறான். அபிதாவின் கண்கள் விரிகின்றன. புன்னகை உதட்டோரத்தில் ஆரம்பித்து அதன் உள்ளொலி மறு ஓரத்திற்கு பரவிச் செல்வது எனக்கு நன்றாய்த் தெரிகிறது. அவள் சித்திக்கு சினிமா ஆசை விடவில்லை. அவளுக்கிருக்காதா? வீட்டை விட்டுக், கரடிமலையை விட்டு வெளியே போக அவளுக்குத்தான் வேறே வாய்ப்பு என்ன இருக்கிறது?

“ஆமாம் இது கண்டிப்பு; வெள்ளிக்கிழமை அபிதா நீ', வந்தே ஆகணும். புதுப்படம்.”

சித்தி எரிந்து விழுகிறாள். “ஆமாம், அவளும் வந்துட்டா வீட்டுக்கு யார் காவல்”

“நீ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/80&oldid=1127324" இலிருந்து மீள்விக்கப்பட்டது