பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv

நுண்ணூலும் ஒத்து விளங்குவது அது, செய்ய பட்டும் பன்மணிக் கோவையும் இடையிற் புனைந்த கோலத்தைக் காட்டுகிறார் ஆசிரியர். மால்வரையும் உயர் ஆழியும் #ரேழ் புவனமும் பூத்த உந்தியையும், - அருள்கூர் தருணாம்புயம் போன்ற தனபாரங்களையும் அழகுபடப் புனைகிறார். அரும்பு போலவும் செப்புப் போலவும் மேரு மலை போலவும் விளங்கிப் பொன்னிறம் பெற்ற நகில்கள் எந்தைதம் கருத்தன; அவர் கண்ணன; அவர் வலிய நெஞ்சை ஆட்டுவிக்கும் இயல்பு படைத்தன. அவற்றின் மேல் சண்பக மாலையும் கடம்ப மலரலங்கலும் முத்து மாலையும் பூண்டு கோலமளிக்கிறாள் அம்பிகை. சில பொழுது பாம்பு மாலையை அணிந்த அகிமாலினியாகவும் இருக்கிறாள்.

அம்பிகையின் திருக்கரங்கள் நான்கும் கோகனதத்தைப்போன்ற அழகுடையன. அவற்றில் முறையே பாசமும் அங்குசமும் மலர்ப்பாணம் ஐந்தும் கரும்பு வில்லும் ஏந்தியிருக்கின்றாள். வளையணிந்த திருக்கைகளில் சூலம் வைத்த கோலமும், வீணை ஏந்தும் திருக் கோலமும் உடையவளாகி விளங்கும் நிலையும் உண்டு: அம்பிகையின் திருத்தோள் மூங்கிலை வென்று விளங்குவது.

அவளுடைய வதனாம்புயத்தில் சிந்தூரத் திலகம் ஒளிவிடுகிறது. வாய் பவளக்கொடி போல்வது. அதனிடையே நிலவும் தவளத் திருநகை மயிலிறகின் 'அடிக் குருத்தை, நினைப்பிக்கின்றது. அத் திருவாயாகிய பவளத்தையும் முறுவலாகிய நிலவையும் துணைவிழியில் எழுதிப் பார்த்திருக்கும் இயல்புடையவர் ஆசிரியர்.

அம்பிகையின் இன் சொல் பாலையும் தேனையும்பாகையும் போலும் பணி மொழி; பண்களிக்கும் குரல். அவள் திருச்செவியில் தரளக்கொப்பும் வயிரக் குழையும் ஒளிர்கின்றன. இயற்கை மணம் வீசும் தேவியின் கன்னங்