பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
107
சரணாரவிந்தம்

அமுதம் உண்ட பிறகு தமக்குரிய ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள். அந்த ஆயுட்காலம் முடிந்தால் அவர்களும் இறந்தார்கள். -

'நூறு கோடி பிரமர்கள் நுங்கினார்' என்பது தேவாரம். இந்திர பதவியில் ஒரே இந்திரன்தான் இருக்கிறான் என்பது இல்லை. எத்தனையோ இந்திரர்கள் வந்து வந்து போனார்கள். பிரமர்களும் பலர் வந்து போனார்கள். அவர்களுக்கும் மரணம் உண்டு. சிவபெருமான் ஒருவனே மரணம் இல்லாமல் கால காலனாக இருக்கிறான்.

அமுதம் கடைந்தபோது ஆலகால நஞ்சு வந்தது. அதை உலவவிட்டிருந்தால் அமுதை உண்பதற்கு முன்பே தேவர்கள் அழிந்திருப்பார்கள். தேவர்களின் ஓலத்தைக் கேட்டு இரங்கிய சிவபெருமான் அந்த நஞ்சை உண்டு அவர்களைக் காப்பாற்றினான்.

நஞ்சையுண்ட திருவிளையாடலைச் சிவபெருமான் செய்தாலும் அம்மையே அதனை உண்டாள் என்றும் சொல்வது உண்டு. சிவபெருமானுக்கும் சக்திக்கும் வேறுபாடு இல்லாமையால் அவ்வாறு சொல்லுகிறார்கள். சிலப்பதிகாரத்தில் பாலைநிலத்தில் உள்ள வேடுவர்கள் கொற்றவையை வழிபடுகிறார்கள் என்ற செய்தி வருகிறது. அவர்கள் தேவியைப் பாடுகிறார்கள். வேட்டுவ வரி என்ற பகுதியில் அப்பாடல்கள் உள்ளன, அங்கே அம்மை நஞ்சுண்ட செய்தியை அழகாக அமைக்கிறார் இளங்கோவடிகள். தேவர்கள் சாவாமையைத் தரும் என்று எண்ணி அமுதம் உண்டார்கள். அப்படி உண்டும் அவர்கள் இறந்து போகிறார்கள். ஆனால் அவர்கள் அஞ்சி நடுங்கிய நஞ்சைத் தான் உண்டு அழிவின்றி விளங்குவதோடு, இறந்தும் பிறந்தும் வரும் அமரர்களுக்குத் திருவருள் பாலிக்கிறாளாம் அம்பிகை.