5. தமிழ்த் தெய்வம் வாழ்க !
மக்கள் தாம் பேசும் மொழியையும், வாழும் நாட்டையும் தாயாக உருவகப்படுத்துதல் உலக வழக்காக இருக்கின்றது. உடலைப் பெற்று உணவூட்டி ஆதரிக்கும் தாயைப்போல் மொழியும் நாடும் அவர்களை இளமையிலூட்டி வளர்ப்பதனை உன்னியே இவ்வழக்கு எழுந்திருத்தல் வேண்டும்.
உரோம் நாடு ஒன்றில் மட்டுமே (அதனைப் பின்பற்றித் தற்கால உலகில் செருமனி நாடும்) தந்தையர் நாடு தந்தையர் மொழியென்றனர். பிற்காலப் புலவர்களும் தந்தையர் நாடு என்று அருகிக் கூறுவதுண்டு. ஒருவேளை உடம்பினை ஊட்டி வளர்க்கும் தாயினும் உயிர்க்கு உணவாம் கல்வியும், உலக வாழ்க்கைக்கு உறுதுணையாம் பொருட்பேறும் தரும் தந்தையே மேம்பட்ட உறவு என அவர்கள் கருதினர் போலும்!
ஆனால், உண்மையில் மக்கள் பேசும் மொழிக்கு உவமையாகத் தாயையும் தந்தையையும்கூடக் கூறுவது போதாது. ஏனெனில், தாயும் தந்தையும் மக்களை வளர்த்தூட்டுவது இளமையில் மட்டுமேயாம். மொழியோ மக்களுக்குத் தம் ஆருயிர் வாழ்க்கை முழுமையும் உறுதுணையாய் நிற்கின்றது. அவர்கள் செயல் மொழி நினைவுகளையெல்லாம் அரசனைப் போல் ஏவிநின்று இயக்குகின்றது. அது மட்டுமன்று, அவர்களுக்குக் கடவுளைப்போல் உள்ளும் புறமுமாக நின்று, அவர்களை விட்டகலாது, அவர்கள் தன்னை மறப்பினும் தான் அவர்களை மறவாது அஃது அவர்களுக்கும் அவர்கள் வழிவழித் தலைமுறையார்க்கும் வாழ்வு தர ஓவாதுழைக்கின்றது. ஆகவே, மொழியை மக்களது தாய், தந்தை, நண்பன், அரசன் என்று உருவகப்படுத்துவதிலும், 'தெய்வம்' என்றே உருவகப்படுத்துதல் சாலச் சிறந்ததாம்.