உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் முழக்கம் [295 ஆண்டவன்தான் கருநாடக நவாபு. இதன் ஒருபகுதியில் பேசப்பட்ட மொழியே கன்னட மொழியாயிற்று. எனவே, கருநாடக இசையுடன் தொடர்புடைய கருநாடக நாடு தெலுங்கு நாடாகாது. ஒன்று, தமிழ்நாட்டின் கருநாடகப் பகுதிக்கு அப்பெயர் உரித்தாதல் வேண்டும்; அல்லது தமிழ்க்கிளைக்குழு மொழியாகிய கன்னடம் பேசும் நாட்டுக்கு உரித்தாதல் வேண்டும். இன்று, அது கன்னடத்தார்க்கு உரிமையாகவில்லை. எனவே, அது முற்றிலும் தமிழர் இசையாய் இருந்திருத்தல் வேண்டும் என்பது கண்கூடு. ஆதலால்தான் இன்று 'தெலுங்கிசை தெலுங்கிசை' எனப் போற்றுபவர், அன்று போற்றாது ஒதுக்கிவிட்டுத் தமிழர்க்குப் புறம்பு என்று கருதிய இந்துஸ்தானி, பார்சி இசைகளை உயர்த்தினர். அக்கால மனப்பான்மையை இன்னொரு வகையிலும் காணலாம். தமிழ் நாட்டின் பகுதியிலுள்ள திருவாங்கூர் அரசரான கார்த்திகைத் திருநாள் பெரிய இசைப்புலவர். ஆனால், அவர் எழுதிய பாட்டுகள் அவர் தாய்மொழியான மலையாளத்திலோ, அல்லது அதனை ஒட்டிய தமிழிலோ, அல்லது அதனை அடுத்த தெலுங்கிலோ இல்லாமல், வட மொழியில்தான் இருந்தன என்று காண்க. கருநாடகம் பழைமைப் பொருளில் வழங்குவது, அஃது இந்துஸ்தானியிலும் பழகிய உயர்வுடையது என்று காட்டவல்லது. கருநாடகத்தினும் பழைய இசை தெம்மாங்கு என்று இன்று சொல்லப்படும் தெம்மாங்கு அல்லது தென்பாங்கு ஆகும். கருநாடக மெட்டும், தென்பாங்கு மெட்டும் இன்றும் இசையைத் தொழிலாகக் கொண்ட - ஊதியச் சரக்காகக் கொண்டவர்களது வெறுப்புக்கு ஆளாய், இஃது என்ன பழைய, கருநாடகமா, தெம்மாங்கா என்ற வகையில் புறக்கணிக்கப் பட்டுவிட்டன. ஆனால், இத் தெம்மாங்கு உண்மையில் குறைவுடையதா? கருநாடகம் குறைவுடையதானால், தெம்மாங்கும் அப்படியே. முன் பழித்த கருநாடகம், பழித்தவர் உயர்த்த உயர்ந்ததுபோல், இன்று அன்று இழிவுபடுத்தக் காரணமாயிருந்த இந்துஸ்தானி இசையிலும் மேம்பட்டதென அனைத்திந்திய இசை மாநாட்டிலும் கொள்ளப்படத்தக்கதானால், தெம்மாங்கும் ஆதரவு பெற்றால், அத்தகைய, அல்லது அதனினும் மேம்பட்ட உயர்நிலை எய்தும் என்பதில் தடையில்லையல்லவா!