உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 95

அழிக்கப்பட்டது. தாராசுரம் கோயிலிலுள்ள ஒரு துவாரபாலகர் உருவின்கீழ், அது அனலெரியூட்டப்பட்ட கலியாணிபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டது என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்புப் பண்பும் சோழர் கலைப்பண்புக்கு மாறாகவே இருக்கிறது.

சோழர் மூவர்

முதலாம் இராசேந்திரனுக்குப்பின் அவன் புதல்வர் மூவர் ஏறத்தாழ தொடர்ச்சியாக ஆண்டனர். அவர்களே முதலாம் இராசாதிராசன் (1013-1054) இரண்டாம் இராசேந்திரன் (1054- 1064), வீரராசேந்திரன் (1063-1069) ஆகியவர்கள். மூவரும் வீரர்களாதலால் அவர்கள் பேரரசின் எல்லை குன்றாமல் காத்து நின்றனர். கொப்பம் போரில் இராசாதிராசன் மேலைச் சாளுக்கியரை எதிர்த்து நின்று ஆனை மீதிருந்து மாண்டான். இதனால் இவன் ‘ஆனைமேல் துஞ்சின சோழன்' எனப்பட்டான். அவன் இளவல் இரண்டாம் இராசேந்திரன் படைக்களத்திலேயே முடிசூட்டிக்கொண்டு போர்க்களத்தின் தோல்வியை வெற்றியாக மாற்றினான்.

இரண்டாம் இராசேந்திரன் காலத்தில் மேலைச்சாளுக்கிய அரசனான சோமேசுவரனின் வீர மைந்தன் விக்கிரமாதித்தியன் கீழைச்சாளுக்கியரிடமிருந்து வேங்கியைக் கைக்கொண்டு அதன் வடபாலுள்ள சக்கரக் கோட்டம் அல்லது சித்ர கூடத்தையும் வென்றான்.ஆனால், சில நாட்களுக்குள் முடக்காறு, கூடல் சங்கமம், சக்கரக்கோட்டம் ஆகிய வடமுனைகளில் வெற்றி கண்டு கீழைச்சாளுக்கிய இளவரசன் விசயாதித்தியனுக்கு அரசுரிமை தந்தான். அரசுரிமைக்குரிய மற்றொரு இளவரசனான இராசேந்திரனுக்குச் சோழ இராசேந்திரன் தன் மகள் மதுராந்தகியை மணம் செய்து கொடுத்து, சக்கரக்கோட்டத்தில் அரசுரிமை தந்தான். இந்தச் சாளுக்கிய இராசேந்திரனே பின்னாளில் குலோத்துங்க சோழனானான்.

கீழைச்சாளுக்கிய அரசுரிமையில் தலையிட்டு, அந்நாட்டை நேச நாடாக்கியது போலவே, மேலைச்சாளுக்கிய அரசுரிமையிலும் தலையிட வீரராசேந்திரனுக்கு ஒரு வாய்ப்புக்கிட்டிற்று. சோமேசுவரன் புதல்வர்கள் இரண்டாம் சோமேசுவரனும் விக்கிரமாதித்தியனும் அரசுரிமைக்குப் போட்டியிட்டனர்.