உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிட நாடு 143

 நகரங்களில் தமிழரும், தமிழ் வணிகரும் கடலோடிகளும், உலவினர். அந்நாடுகளின் நாணயங்கள் தமிழகத்திலும், தமிழகத் தங்கம் அந்நாடுகளிலும் காணப்படுகின்றன. தேக்கு, சந்தனம், யானைத் தந்தம், மணப் பொருள்கள், குரங்குகள் முதலியவற்றைத் தமிழகம் அந்நாடுகளுக்கு அனுப்பியதாக அறிகிறோம். அது மட்டுமன்று; புதுக்கற்கால நாகரிகத்திலேயே அவ்வெல்லா நாகரிகங்களும் நிலவிய அத்தொல்பழங் காலத்திலே, தமிழகமட்டும் தங்கச்சுரங்கமட்டு மன்றி, இரும்புச் சுரங்கங்களும் அகழ்ந்து, இரும்புக் கருவிகளும் வழங்கத் தொடங்கியிருந்ததாக அறிகிறோம்.

அறவுருவான காந்தியார் போற்றிய கீழ்திசையின் பழஞ்செல்வங்களான கைத்தறியும் இராட்டினமும் நெசவுத் தொழிலும் உழவும் பழங்காலத்திலேயே- இருபதினாயிரம் நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே-தமிழகத்தில் வழங்கின என்பதை மைசூர் இராயலசீமா பகுதிகளில் கல்நிலங்களில் அகழ்ந்து காணப்படும் கல்லறை மாடங்கள் காட்டுகின்றன.