உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 அப்பாத்துரையம் - 11

திராவிடத்திற்கு ஓர் உயிர் வரலாறு உண்டு. நாகரிகம், நாகரிக வளர்ச்சி உண்டு. அதில் இடப்பரப்பு வகையிலோ, இன வகையிலோ, மொழி வகையிலோ உயர்வு தாழ்வுகள்/ கிடையா. அதிலுள்ள வேறுபாடுகள், மொழி வேறுபாடுகள்கூட, ஒன்றை ஒன்று நிறைவுபடுத்தும் ஒரே பெருந்தேசியத்தின் உறுப்பு வேறுபாடுகளே.

இதற்கு நேர்மாறாக இந்தியக் கூட்டுறவுக்கு, பாகிஸ்தானும் திராவிட நாடும் நீங்கிய இந்தியாவுக்கு,- அயலினப் படையெடுப்புக்களின் வரலாறன்றி வரலாறில்லை. இந்தியக் கூட்டுறவின் கீழ்கோடியில், இந்தியாவில் பாதியும் கிழக்குப் பாகிஸ்தானில் பாதியுமாகப் பிரிந்து கிடக்கும் வங்கம், விதேகம் (பீகார்) ஆகிய கீழ்திசைப் பரப்பில் ஆண்ட அசோகனும் சந்திரகுப்தனுமன்றி உள்நாட்டு அரசர்களாக அவர்கள் எவரையம் காட்டமுடியாது.

சந்திரகுப்தன், அசோகன் ஆகிய இவ்விருவர்களில்கூட இன்று பாரத பக்தர் பெருமைப்படக் கூடிய அளவில் உலகப்புகழ் நிறுவியவன் அசோகன் மட்டுமே. ஆனால் பாரதத்தின் புராணமும் இதிகாசமும் இந்த அசோகனை அறிந்ததில்லை; அறிந்த அளவில் பெருமைப்படுத்திப் பாராட்டியதுமில்லை. அசோகன் பண்பாட்டைப் பழைய பாரதம் அயல் பண்பாடு, வேண்டாப் பண்பாடாகவே விலக்கி வைத்திருந்தது என்பதை இன்று யாரும் மறக்க முடியாது - மறைத்தே வருகின்றனர்!

இந்தியா தவிர மற்ற எல்லா நாகரிக நாடுகளும் வரவேற்ற பண்பாடு, அசோகர் பின்பற்றிய புத்தர் பண்பாடு. இந்தியா என்ற பாரதமோ, பாரதத்தின் வருணாசிரம தருமப் பண்பாடோ, அதற்கு ஆதாரமான பாரதத்தின் பழைய வேதபுராண சுமிருதி இதிகாசங்களோ அப்பண்பாட்டுக்கு மதிப்பளித்தது கிடையாது. இதுமட்டுமோ? மெய்யும் பொய்யும் கலந்து கூடப் புராண இதிகாசங்கள் பெருமைப்படுத்திய இந்திய - இந்து அரசு அசோகன் அரசன்று, புத்த சமயப்பேரரசரான கனிஷ்கன், ஹர்ஷன் கூட அல்லர்- சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அரசுமட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. சமஸ்கிருதமும், சமஸ்கிருத நாகரிகமும் வளர்த்த பேரரசன் அவன் ஒருவனே- அசோகனோ பிறரோ அல்லர்.