உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

219

வருகைக்குப் பின், ஆரிய திராவிட வேறுபாடு மட்டுமல்ல - ஆரியருக்குள்ளும் திராவிடருக்குள்ளும் நிலவிய, நிலவுகிற வேறுபாடுகள்கூட உயர்வு தாழ்வு வேறுபாடுகளாக, ஆதிக்க அடிப்படையில் ஆண்டான் அடிமை வேறுபாடுகளாக ஆக்கப் பட்டன. குடி வேறுபாடுகள் குல வேறுபாடுகளாக்கப்பட்டன.குல வேறுபாடுகள் சாதி வேறுபாடுகளாக, சாதி வேறு பாடுகள் வருண வேறுபாடுகளாகப் படிப்படியாக வளர்ந்தன. மனித இனத்தில் இயல்பாக எங்கும் எழக்கூடும், நிலவக் கூடும் சிறு உயர்வு தாழ்வுகள் இயல்பாகவே மீண்டும் இயற்கையாற்ற லாலேயே மாறுபடுபவைகள்தாம். மற்ற நாடுகளில் அவ்வாறே மாறுகின்றன. ஆனால், திராவிடத்திலும் அது சூழ்ந்த நிலங்களிலும் இந்த இயல்பான சிறு உயர்வு தாழ்வுகள் செயற்கையான பெருத்த உயர்வு தாழ்வுகளாகவும், தற்காலிக உயர்வு தாழ்வுகள் நிலையான உயர்வு தாழ்வுகளாகவும், எளிதில் மாறக்கூடிய உயர்வு தாழ்வுகள் மாற முடியாத, மாற்ற முடியாத, சமய சாத்திர, கடவுளடிப்படை யான மாறுபாடுகளாகவும் ஆக்கப்பட்டு வந்துள்ளன. திராவிட இயக்கம் கீழை உலகில் தோன்றும்வரை எந்த இயக்கத்தாலும் மதத்தாலும்- இஸ்லாத்தினால் கூட - சாதிவேறுபாட்டை அகற்றவோ தளர்த்தவோ முடியவில்லை. அது வளர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது. திராவிட இயக்கம் பரவாத இடங்களில் இன்னும் வளர்ந்து கொண்டேதான் வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒளி இன்னும் பரவாத இராமநாதபுரத்தில் எழுந்துள்ள முதுகுளத்தூர்ப் படுகொலை இதற்கு ஒளி தரும் சான்றாகும்.

ஆரிய சமய, சமுதாய, பொருளாதார, சட்ட ஆதிக்கம் நீங்கிய ஒரு சுதந்திர திராவிட சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதார வாழ்வு அமையுமானால், அதில் திராவிடர் மட்டுமல்ல, ஆரியரும் மற்ற இனங்களும் கூட இன உயர்வு தாழ்வற்ற சரிசம அடிப்படையில், அன்பு ஒற்றுமையும் அறிவார்ந்த கூட்டுழைப்பும் பெற்று மேம்பட முடியும் என்பதில் ஒரு சிறிது வரலாற்று நோக்க முடையவர்க்கும் ஐயம் ஏற்படாது. இந்திய மாநிலத்தில் கிழக்கைவிட மேற்கிலும், வடக்கைவிடத் தெற்கிலும் பிராமணரே முன்னேற்றமடைந்துள்ளதும், இதே போக்கில் மொழிகள் வளமடைந்துள்ளதும் இதனைத் தெளிவாகக் காட்டும்.