உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாட்டிலும் மற்ற இலெமூரியாக் கண்டப் பகுதிகளிலும் நாம் ஒரே வகைப் பாறைகளையும், ஒரேவகை உயிர்செடி இனச் சின்னங்களையும் காண்கிறோம்.


காவிய ஏடு

தென்னாடு, நிலஉலக வளர்ச்சி, உயிரின வளர்ச்சி மனித இனவளர்ச்சி ஆகிய இயற்கையின் பல படிமுறை வளர்ச்சிகளைப் படலம்படலமாகத் தொகுத்து எடுத்துக்காட்டும் ஒரு பெருங்காவிய ஏடாகத் திகழ்கின்றது. தென்னாடு என்ற பெயர் எப்போது என்ன பொருளில் வழங்கத் தொடங்கிற்று என்று வரையறுத்துக் கூறமுடியாது. 'தென்' என்ற சொற்பகுதி தெற்குத் திரையைக் குறிக்கக்கூடும்; இனிமை என்ற பொருளையும் குறிக்கக்கூடும். இவற்றுள் முந்திய பொருள் எது என்று கூற முடியாவிட்டாலும், இருபொருளும் தொடர்புடையன என்பது மட்டும் உறுதி. தென்னாட்டின் தென்கோடியிலுள்ளது தமிழகம். அதில் வழங்கும் தமிழ்மொழி, தென்மொழி என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் தென்கோடியிலுள்ள பாண்டிநாடு வரலாற்றுக் காலத்திலும் 'தென்னாடு' என்றே குறிப்பிடப்பட்டது. ஆகவே தென்னாடு என்ற பெயர் தெற்கிலிருந்து பரந்துவளர்ந்த ஒரு நாகரிக நாட்டைக் குறிப்பது என்று கூறத்தகும். வடதிசையில் மற்ற நாகரிகங்கள் புதிதாகத் தோன்றி வளர்ந்தபின், தென்னாடு என்ற இப்பெயரே வடநாடு, வடமொழி ஆகியவற்றினின்று இதனைப் பிரித்தறியவும் உதவியிருக்கக் கூடும். அதே சமயம் ‘தென்' என்ற சொல்லின் மற்றப்பொருளும் தென்னாட்டு வாழ்வில் வேரூன்றிய பொருளேயாகும். அது 'தேன்' என்ற சொல்லுடன் தொடர்புடையது. தென்னாட்டிலுள்ள எல்லா மொழிகளின் பெயர்களும் இதே பொருளை உடையதாயிருக்கிறது என்று காணலாம். 'தமிழ்' என்ற பெயர் 'இனிமை' என்ற பொருளில் தமிழிலக்கியத்தில் வழங்குகின்றது. ‘தெலுங்கு' என்ற பெயரின் பழைய வடிவம் 'தெனுகு' என்பதே. இது 'தேன் போன்ற மொழி' என்ற பொருளிலேயே வழங்கிற்று. இது போலவே 'கன்னடம்' என்ற சொல் ‘கரும்பு' என்ற