18 அப்பாத்துரையம் - 11
தென்னாட்டவராகிய நாம் தென்னாட்டின் புகழை வளர்க்கவும், உலக நாகரிகத்தில் தென்னாட்டுக்குரிய இடத்தை அதற்கு மீட்டும் பெற்றுத்தரவும் பாடுபட வேண்டும். இது சிறு செயல் அன்று; எளிய செயலும் அன்று. நாட்டு மக்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் ஒன்றுபட்டு ஒத்துழைத்து நிறைவேற்ற வேண்டிய செயல் ஆகும். இதில் ஈடுபட்டு வெற்றிகாண வேண்டுமானால், ஈடுபடுபவரைத் திறம்பட நடத்த வேண்டுமானால், நாம் தென்னாட்டின் இன்றைய சூழ்நிலைகளைச் சரிவர உணர்ந்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்திலேயே, அதன் வருங்கால வளர்ச்சிக்குரிய நற்பண்புகளையும், அவ்வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய வளர்ச்சிக் கூறுகளையும் அவற்றின் பழைமை நோக்கித் துருவிச்சென்று ஆராய்தல் வேண்டும்.
இவ் இருவகைகளிலும் நமக்குப் பேருதவியாக வல்லது தென்னாட்டு வரலாறே. அதைத் தென்னாட்டார் அனைவரும் ஆடவரும் பெண்டிரும், முதியோரும் இளைஞரும், உள்ளதை உள்ளவாறே ஆய்ந்துணர்வது இன்றியமையாதது. சிறப்பாக, வருங்கால உலகின் சிற்பிகளான இளைஞர், நங்கையர், மாணவ மாணவியர், பகுத்தறிவாராய்ச்சிப் பண்புடனும், விருப்பு வெறுப்பற்ற ஒருதலை சாயா நடுநிலைப் பண்புடனும் இத்துறையறிவைக் கற்று விளக்கம் பெறுவதற்கு உரியவர் ஆவர்.
அடிக்குறிப்புகள்
1. கி.பி. என்பது கிறிஸ்துவுக்குப் பின். கி.மு. என்பது கிறிஸ்து பிறப்பதற்குமுன். எனவே, கி.மு. 1000 என்பது இன்றையிலிருந்து ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்.
2. Egypt. Palestine, Chalden, Babylon, Asia Minor, Sumer, Elam
3. Mediterranean sea
4. கல் - மைல்
5. Poeincians
6. Finns (people of Finland)